முகக்கவசம் அணியாமல் பொதுவெளியில் நடமாடிய 39 பேர் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரான பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று (31) தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்கான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு வலியுறுத்திவந்தோம். அதனை கட்டாயப்படுத்தி வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டது. அதன்பின்னர் மக்களுக்கு 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் முகக்கவசம் அணியாத, சமூகஇடைவெளியைப்பின்பற்றாத அதேபோல் சுகாதார நடைமுறைகளைமீறும் நபர்களை கைது செய்யும் நடவடிக்கை நேற்று முதல் ஆரம்பமானது. நேற்று மாத்திரம் முகக்கசவம் அணியாத, சமூகஇடைவெளியை பின்பற்றி செயற்படாத 39 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நடவடிக்கை தொடரும். கைதானவர்களுக்கு ஆறுமாத சிறை தண்டனை அல்லது 10 ஆயிரம் ரூபா தண்டப்பணம் அறவிடப்படும்.
அதேவேளை, இன்று (31) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்துக்குள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 221 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 44 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளனர். அதேபோல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து இன்று காலைவரை மொத்தமாக ஆயிரத்து 450 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” – என்றார்.