“மஸ்க் வருத்தம் தெரிவித்திருப்பது நன்று. அவர் மீது நான் எந்தக் குறையும் சொல்லப்போவதில்லை. ஆனால் நான் சற்று ஏமாற்றமடைந்தேன்.” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சரியாக ஒருவார காலத்துக்கு முன் பரஸ்பரம் விமர்சனங்களைத் தெறிக்கவிட்ட ட்ரம்ப் – மஸ்க் தற்போது ஆவேசம் தனிந்த கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
ஏற்கனவே ட்ரம்ப் – மஸ்க் மோதலில் வார்த்தைகள் தடித்தபோது, பள்ளிக் குழந்தைகள் மோதலைப் போல் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், ஒரே வாரத்தில் இருவரும் சமரச பாதைக்கு திரும்பியதும் பகடிக்குள்ளாகி இருக்கிறது.
‘ஒரு வல்லரசின் அதிபரும், ஒரு பெரும் பணக்காரரும் கேலிக்கூத்து செய்கின்றனர்’ என்று நெட்டிசன்கள் நகையாடி வருகின்றனர்.
எலான் மஸ்க், எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள தகவலில், “ ஜனாதிபதி ட்ரம்ப் பற்றி கொஞ்சம் அதிகமாக விமர்சித்துவிட்டேன், வருந்துகிறேன்” என தெரிவித்தார்.
அதனை ஏற்றுக் கொள்வது போல், “மஸ்க் வருத்தம் தெரிவித்திருப்பது நன்று. அவர் மீது நான் எந்தக் குறையும் சொல்லப்போவதில்லை. ஆனால் நான் சற்று ஏமாற்றமடைந்தேன்.” என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளார்.