முடிவுக்கு வருகிறது வர்த்தகப் போர்: அமெரிக்கா, சீனா நாளை பேச்சுவார்த்தை!

 

அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளிடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை லண்டன் நகரில் நாளை நடைபெறவுள்ளது.

அமெரிக்கா, சீனா ஆகிய 2 பெரிய பொருளாதார பலமிக்க நாடுகள் இடையேயான வர்த்தக போரானது கடந்த சில ஆண்டுகளாக தீவிரமடைந்து காணப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, சீனா உள்பட பல்வேறு நாடுகளிடையே வரிவிதிப்புகளை மேற்கொண்டார். சீனா மீது 34 சதவீத வரியை விதித்தார்.

இதனையடுத்து, அமெரிக்கா மீது சீனாவும் வரியை விதித்தது. இந்த வரிப்போரானது, சீனா மீது அமெரிக்கா 145 சதவீதமும், அமெரிக்கா மீது சீனா 125 சதவீத வரியும் உயர்த்தும் அளவுக்கு கொண்டு சென்றது. இதனால், உலகளவிய பங்குச்சந்தைகள் வெகுவாக பாதிக்கப்பட்டன.

இறுதியாக, இரு நாடுகளும் 90 நாள்களுக்கு வரி விதிப்பை ஒத்திவைப்பதாக பரஸ்பர ஒப்பந்தம் மேற்கொண்டன.
இதைத் தொடர்ந்து, 2 நாடுகளின் தலைவர்கள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட முடிவு செய்தனர். இதன் ஒரு பகுதியாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன பிரதமர் ஜீ ஜின்பிங் ஆகியோர் கடந்த வியாழக்கிழமை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசினர்.

இந்நிலையிலேயே லண்டனில் நாளை அமெரிக்க, சீன நாடுகளின் தலைவர்கள், வர்த்தகப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தையில், அமெரிக்க தரப்பில் கருவூல அமைச்சர் ஸ்காட் பெஸ்சென்ட், வர்த்தகத்துறை அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக், அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமீசன் கிரீர் உள்பட அதிகாரிகள், சீன தலைவர்களுடன் வர்த்தக பேச்சுவார்த்தையில் ஈடுபடுடவுள்ளனர். இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறும் என்று நம்புவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டில், இரு நாடுகளுக்கு இடையே 58 ஆயிரத்து 200 கோடி டாலர் மதிப்பில் வர்த்தகம் நடைபெற்ற நிலையில், வரிப் போரால் நடப்பாண்டு வர்த்தகம் வெகுவாக சரிந்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles