ம.ம.முவின் தேசிய மாநாட்டை ஏப்ரல் 26,27 ஆம் திகதிகளில் நடத்த திட்டம்

மலையக மக்கள் முன்னணியின் தேசிய மாநாடும் 35 ஆண்டு நிறைவு விழாவும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 26, 27 ஆம் திகதிகளில் நுவரெலியாவில் அல்லது ஹட்டனில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தள்ளார்.

இது தொடர்பான கட்சியின் கலந்துரையாடல் கூட்டம் ஒன்று அண்மையில் இடம்பெற்றதாகவும் இதன்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மலையக மக்கள் முன்னணி 1989 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் மறைந்த தலைவர் பெரியசாமி சந்திரசேகரனால் ஸ்தாபிக்கப்பட்டது.

மலையக தேசியம் மற்றும் உரிமை அரசியலுக்காக ஆரம்பிக்கப்பட்ட மலையக மக்கள் முன்னணியை ஆரம்பத்திலேயே ஒரம் கட்டிவிட வேண்டும் என பலரும் செயற்பட்டு வந்த நிலையில் தனது விடாமுயற்சியின் பயனாகவும் அன்று அவருடன் இணைந்திருந்த இளைஞர்களின் துடிப்பான செயற்பாடுகளாலும் மலையகத்தின் ஒரு மாற்று கட்சியாக உருவெடுத்தது.

யாரும் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு வளர்ச்சியடைந்த மலையக மக்கள் முன்னணி இலங்கை அரசியல் வரலாற்றில் 1994 ஆம் ஆண்டு ஒரு அரசாங்கத்தை தீர்மானிக்கின்ற சக்தியாக அது தன்னை அரசியலில் வளர்த்துக் கொண்டது.

“ நான் தலைமைப் பொறுப்பை ஏற்ற பின்பு அமரர் சந்திரசேகரனின் வழியில் இந்த கட்சிக்கு தலைமைதாங்கி பல வெற்றிகளை பெற்றுக் கொள்ள முடிந்துள்ளது. எனவே மலையக மக்கள் முன்னணிக்கு என ஒரு சரித்திரம் இருக்கின்றது.கடந்த பல வருடங்களாக மாநாட்டை நடத்த முடியாத நிலையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள மாநட்டை மிகவும் சிறப்பாக முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.” என்று இராதாகிருஸ்ணன் குறிப்பிடுகின்றார்.

மேலும் இந்த மாநட்டில் இந்தியா மலேசியா சிங்கப்பூர் உட்பட பல நாடகளில் இருந்தும் முக்கியஸ்தர்கள் பங்கெடுக்கவுள்ளனர்.குறிப்பாக இந்தியாவின் தமிழ் நாட்டில் இருந்து மேடைப் பேச்சாளர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இதன்போது மலையக மக்கள் முன்னணிக்காகவும் அதன் முன்னேற்றத்திற்காகவும் செயற்பட்டவர்கள் அத்துடன் மலையகத்திற்கு பெருமை சேர்த்தவர்கள் என பலரும் கௌரவிக்கப்படவுள்ளனர்.இந்த மாநாடானது மலையக மக்கள் முன்னணியின் ஒரு மைகல்கல்லாக அமையும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles