ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா தன்மீது தாக்குதல் மேற்கொண்டார் என் றுயாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்றது.
இதன்போது ஒழுங்கு பிரச்சினையொன்றை எழுப்பிய அர்ச்சுனா எம்.பி.,
” இன்று மதியம் 2.30 மணிக்கு எதிர்க்கட்சி தலைவர் அலுவலகம் சென்றிருந்தேன். நேர ஒதுக்கீடு தொடர்பில் அங்கிருந்தவர்களிடம் வினவினேன். இன்று எனக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. நாளை ஒதுக்கப்பட்டுள்ளதா என கேட்க சென்றிருந்தேன். அங்கு அதிகாரிகள் இருந்தனர். அவர்கள் வேறொரு அலுவலகத்துக்கு அழைத்துச்சென்றனர்.
நாளை 4 மணியளவில் எனக்கு நேரம் வழங்க முடியும் எனக் கூறினர். நேர ஒதுக்கீடு பற்றிய நடைமுறை குறித்து கேட்டிருந்தேன். அப்போது சுஜித் என்ற நபருடன் கதைக்க சொன்னார்கள். சுஜித் என்ற நபர் (சுஜித் பெரேரா எம்.பி.) என்னை தாக்கினார். திருப்பி தாக்க எனக்கு ஒரு நிமிடம் போதும். எனது தந்தையின் வயது அவருக்கு. அதனால் தாக்கவில்லை.”- என்று அர்ச்சுனா சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார,
” யாழ்.மாவட்ட எம்.பி அர்ச்சுனா, எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்துக்கு வந்து எதிர்க்கட்சித் தலைவரின் செயலாளரிடம் மோசமான முறையில் செயல்பட்டார். தகாத வார்த்தை பிரயோகத்தை மேற்கொண்டார். இதுதொடர்பில் நாம் சபாநாயகரிடம் முறைப்பாடு செய்துள்ளோம். சிலர் கல்விக் கற்றிருந்தாலும் அறிவற்றவர்களாகவே செயற்படுகின்றனர்.
இதுதொடர்பில் அவதானம் செலுத்தி பொருத்தமற்ற எம்.பிகளை எதிர்க்கட்சியில் அமரவிடாது வேறு இடத்தில் அமரச் செய்யுங்கள்” என்றார்.
அதன்பின்னர் கருத்து வெளியிட்ட சுஜித் பெரேரா எம்.பி.,
‘ அர்ச்சுனா எம்.பி என்மீது பாரிய குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார். அவ்வாறு எந்தவொரு சம்பவமும் நடைபெறவில்லை. அவரது குற்றச்சாட்டை நான் முற்றாக நிராகரிக்கிறேன். அவர்தான் எனக்கு அச்சுறுத்தல் விடுத்தார்.” – என்றார்.