ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனது ஏர்பஸ் A320-200 ரக விமானமொன்றுக்கு சிற்றி ஒப் யாழ்ப்பாணம் (“City of Yalpanam” எனப் பெயரிட்டுள்ளது. இந்நடவடிக்கையானது யாழ். மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தெற்காசியாவின் சிறந்த விமான சேவை என அண்மையில் விருந்து பெற்ற குறித்த விமான நிறுவனம், யாழ்ப்பாணத்தின் பாரம்பரியத்தையும் , கலாசார முக்கியத்துவத்தையும் மதிக்கும் வகையிலேயே இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது.
பல மேற்குலக நாடுகளில் தற்போது விடுமுறை காலம் ஆரம்பமாகியுள்ளதால் ஏராளமான புலம்பெயர் தமிழர்கள் தாயகம் நோக்கி வருகின்றனர். குறிப்பாக நல்லூரி மகோற்வசம் ஆரம்பமாகியுள்ளதால் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்களில் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் யாழ்ப்பாணத்தை பிரதிபலிக்கும் வகையில் பெயரிடப்பட்டுள்ளதால் அது புலம்பெயர் தமிழர்களையும் அதிகம் கவர்ந்துள்ளது.
எனினும், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து, யாழ். பலாலி விமான நிலையத்துக்கு நேரடி விமான சேவை இன்மையால், பயணிகள் தொடர்ந்து பயண சிரமங்களை எதிர்கொள்கின்றனர். தற்போது இரத்மலானையில் இருந்து மட்டுமே யாழ்ப்பாணத்திற்கு உள்ளுர் விமான சேவை இடம்பெறுகின்றது. எனினும், இது காலதாமதத்தை ஏற்படுத்துகின்றது என பயணிகள் கருதுகின்றனர்.
இதனால் பல பயணிகள் சென்னைக்குச் சென்று அங்கிருந்து யாழ்ப்பாணம் வரும் நிலை காணப்படுகின்றது. எனினும், இந்த முறையும் அனுமதிக்கப்படும் பதிவு செய்யப்பட்ட பயணப் பொதிகளின் எண்ணிக்கையில் உள்ள கட்டுப்பாடுகள் காரணமாக சவால்கள் பலவற்றை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில், கட்டுநாயக்கவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு நேரடி விமானங்கள் அறிமுகப்படுத்தப்பட்டால், அது பயணத் திறனை பெரிதும் மேம்படுத்தும் என்றும், வடக்குக்கு வருபவர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வைக்கும் எனவும் கருதப்படுகின்றது.