யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தினுள், துடுப்பாட்ட வீரர் குமார் சங்ககாரவுக்கு சிலை நிறுவுவதற்காக எவரும் அனுமதி கோரவில்லை என்றும், அவ்வாறான எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் வைக்கப்படுவதற்காக துடுப்பாட்ட வீரர் குமார் சங்ககாரவின் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளதாக இன்று காலை முதல் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது.
இது குறித்து பல்கலைக்கழக விளையாட்டுத்துறைப் பணிப்பாளர் உட்பட நிர்வாகத்தினருடன் தொடர்பு கொண்டு கேட்ட போது, பல்கலைக்கழகத்தினுள் துடுப்பாட்ட வீரர் குமார் சங்ககாரவுக்கு சிலை அமைப்பதற்கான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
சிலை அமைப்பதற்காக எவரும் அனுமதி கோரவில்லை. வளாகத்தினுள் சிலைகளை நிறுவுவதென்பது நீண்ட பொறிமுறைகளைக் கொண்டது. அவ்வாறான அனுமதி எதுவும் வழங்கவில்லை என்றும், ஊடகங்களின் வாயிலாகவே இதனைத் தாம் அறிந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
