நாட்டில் இந்த வருடத்தின் டிசம்பர் மாதத்திற்குள் போதைப் பொருள் பாவனையை 50 வீதமாக குறைக்க முடியும் என பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்தார்.
போதைப் பொருளற்ற நாட்டைக் கட்டி யெழுப்பும் நோக்கில், ஆரம்பிக்கப்பட்ட யுக்திய சுற்றி வளைப்பு நடவடிக்கைகளுக்கு ஆறு மாதம் நிறைவடைந்துள்ளது.
புலனாய்வுப் பிரிவினர் பொலிஸார் மற்றும் பொது மக்களின் ஒத்துழைப்புடன் இதுவரை 5979 நபர்களை கைது செய்ய முடிந்துள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
யுத்திய நடவடிக்கைகளில் இதுவரை கைப்பற்றப்பட்டுள்ள போதைப் பொருட்களின் பெறுமதி 19 ஆயிரத்து 75 மில்லியன் ரூபா என்றும் அவர் தெரிவித்தார்.
யுத்திய நடவடிக்கைகளின் போது பல்வேறு வகையிலும் தமக்கு அச்சுறுத்தல்கள் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தாலும், இந்நடவடிக்கையை கைவிடப் போவதில்லை என தெரிவித்த அவர், நாட்டில் இறுதியான ஒரு போதைப் பொருள் வர்த்தகரை கைது செய்யும் வரை இந்த நடவடிக்கைகள் தொடரும் என்றும் தெரிவித்தார்.
யுத்திய நடவடிக்கைக்கு ஆறு மாதங்கள் நிறைவு பெறும் நிலையில், இது தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வொன்று கொழும்பில் நடைபெற்றது.
இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உட்பட துறை சார்ந்த முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் அது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்
போதைப் பொருள் வர்த்தகத்தை மேற்கொள்வோர் பலர் சுமார் 40 வருடங்களாக இரண்டு மூன்று பரம்பரையாக இந்த போதைப் பொருள் வர்த்தகத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் மூலம் அவர்கள் சம்பாதித்த சொத்துக்கள், பங்களாக்கள், கார்கள் என அனைத்தையும் அரசுடமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பெரும்பாலானவர்கள் மேல் மாகாணத்திலேயே உள்ளனர். அவர்களில் எஞ்சியுள்ளவர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.