நடிகர் ரஜினிகாந்தை கடும் சொற்களை பயன்படுத்தி விமர்சனம் செய்ததற்காக வருந்துகிறேன். இனி எப்போதும் எங்களின் புகழ்ச்சிக்குரியவர் ரஜினிகாந்த் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
சென்னை வளசரவாக்கம் அடுத்த சின்னபோரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வாரின் 7 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அக்கட்சியினர் மலர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் நிருபர்களிடம் சீமான் கூறியதாவது:-
நடிகர் ரஜினிகாந்தின் முடிவை நான் வரவேற்கிறேன். அவரும், அவரது குடும்பத்தாரும் கருதுவதுபோல் அவரது உடல்நலன், நிம்மதி, அமைதி மிகவும் முதன்மையானது. அதை விரும்பியே அவரிடம், அரசியல் வேண்டாம் என்ற கருத்தை பலமுறை நான் பதிவு செய்து இருந்தேன்.
கடந்த காலங்களில் ரஜினி மீது பெரும் மதிப்பு வைத்திருந்த ரசிகன் நான். அரசியல் ரீதியாக வரும்போது அவர் மீது கடும் விமர்சனங்களை, கடும் சொற்களை பயன்படுத்தி இருக்கலாம். அது அவரையோ, அவரது குடும்பத்தையோ, ரசிகர்களையோ காயப்படுத்தி இருந்தால் அதற்காக வருந்துகிறேன்.
இனி எப்போதும் எங்களின் பெரும் புகழ்ச்சிக்குரியவர் ரஜினிகாந்த். அவர் மிகச்சிறந்த திரைஆளுமை கொண்டவர். அதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆசிய கண்டம் முழுவதும் அவரது புகழ் வெளிச்சம் பரவிக்கிடக்கிறது.
தமிழ் மக்கள் பெரிதும் அவரை கொண்டாடுகிறார்கள். நாம் தமிழர் பிள்ளைகளும் இனி அவரை கொண்டாடுவார்கள். அரசியல், அவருக்கு அவசியம் இல்லை. அவர் எடுத்த முடிவை பாராட்டுகிறேன். அவரது பிள்ளைகள் இருவரும் வேண்டாம் என கூறியதால் அவர் இந்த முடிவை எடுத்ததாக எனக்கு கூறினார்கள்.
இளம் வயதிலேயே அமைதியை தேடி இமயமலை சென்றவர். இப்போது அவருக்கு கூடுதலாக நிம்மதியும், அமைதியும் தேவைப்படும். அரசியலில் உட்கட்சி பிரச்சினையை சமாளிக்க முடியாது. அரசியலில் இறக்கிவிட்டு விட்டு எல்லோரும் அவரை திட்டுவார்கள். புகழ்ச்சியை மட்டுமே பார்த்த அவரால் இதனை தாங்க முடியாது. ” – என்றார்.