“2022 ஆம் ஆண்டு, இந்த நாடு பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்து, ஒரு தலைவரைத் தேடிக்கொண்டிருந்த வேளையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டை நிபந்தனையின்றிப் பொறுப்பேற்றார். இன்று பங்களாதேஷில் நடப்பது போல், அவரை மிரட்டி, வீட்டுக்கு தீ வைத்து, நூலகத்தை அழித்து, அரச அதிகாரத்தைக் கைப்பற்ற சிலர் முயன்றனர்.” – என்று அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.
“ அன்று அவர் ஒரு அடி ஏனும் பின்னோக்கி வைத்திருந்தால் இந்த நாட்டில் இன்று பங்களாதேஷ் இருக்கும் நிலை ஏற்பட்டிருக்கும். இன்று பங்களாதேஷில் 19 மணி நேர மின்வெட்டு உள்ளது. 213 ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. பங்களாதேஷில் முதலீடு செய்துள்ள இலங்கை ஆடைத் தொழிற்சாலை உரிமையாளர்கள் இன்னும் ஒருமாத காலத்திற்கு அந்நாட்டின் நிலைமையை அவதானித்து தமது வர்த்தகத்தைவேறு நாட்டிற்கு அல்லது இலங்கைக்கு மாற்றவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இத்தகைய அழிவில் இருந்து இலங்கையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க காப்பாற்றினார். அப்படி காப்பாற்றப்பட்ட நாட்டில், மக்கள் இன்னல்களுக்கு ஆளான போது தன்னைப் பாதுகாத்துக் கொள்ள ஓடியவர்கள் இன்று தமக்கு அதிகாரம் வழங்குமாறு கேட்கின்றனர். எனவே, இந்தப் பயணத்தைத் தொடர்வதா, சிரமத்துடன் கட்டியெழுப்பிய நாட்டை முன்னோக்கி நகர்த்துவதா, அல்லது ஆரம்பித்த வேலைத்திட்டத்தை நிறுத்தி மாற்றங்களைச் செய்து அழிப்பதா? என்பதை இந்நாட்டு மக்கள் செப்டெம்பர் 21ஆம் திகதி தீர்மானிக்க வேண்டும்.’’ எனவும் அலிசப்ரி குறிப்பிட்டுள்ளார்.
