ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கதான் தற்போது ஆட்சி செய்கின்றார், அவர் தமிழ் பேசும் மக்களுக்காக என்ன செய்துள்ளார்? எனவே, சஜித்துக்கே சிறுபான்மையின மக்களின் ஆதரவு கிட்டும் என்று அடித்து கூறியுள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார.
அடுத்த ஜனாதிபதி தேர்தலின்போது தமிழ் பேசும் மக்களின் ஆதரவு ரணிலுக்கா, சஜித்துக்கா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“ சிறுபான்மையின மக்களுக்காக ரணில் விக்கிரமசிங்க தற்போது என்ன செய்துள்ளார்? அவரிடம்தான் தற்போது அதிகாரம் உள்ளது.
தமிழ் பேசும் மக்களின் கட்சிகள் எம்முடன்தான் கூட்டணி வைத்துள்ளன. பேச்சுகள் நடத்தப்படுகின்றன. மக்களின் சார்பாக தலைவர்களே கூட்டணி வைத்துள்ளனர்.” – எனவும் ரஞ்சித் மத்தும பண்டார கூறினார்.
அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியின்போது சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கை மறுசீரமைக்கப்படும், நாட்டுக்கு நன்மை பயக்ககூடிய வகையில் அது மாற்றப்படும். இதற்கான பேச்சுகள் முன்னெடுக்கப்படும். சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் இரத்து செய்யப்படமாட்டாது எனவும் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.
