ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அரசு முறை பயணமாக நாளை டெல்லிக்கு பயணம் மேற்கொள்கின்றார்.
அவரது பயணத்தின் போது ரஷ்யாவும் இந்தியாவும் இணைந்து அதிநவீன எஸ் 500 ஏவுகணைகளை தயாரிப்பது குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
இந்திய – ரஷ்ய 23-வது வருடாந்திர உச்சி மாநாடு டிசம்பர் 4, 5-ம் திகதிகளில் டெல்லியில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் நாளை டெல்லிக்கு வருகிறார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியும் ஜனாதிபதி புடினும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
குறிப்பாக பாதுகாப்பு, எரிசக்தி, வர்த்தகம், விண்வெளி, அணுசக்தி, தொழில்நுட்பம் குறித்து தலைவர்கள் இருவரும் விரிவான ஆலோசனை நடத்த உள்ளனர்.
ரஷ்யாவிடம் இருந்து 5 எஸ் 400 ஏவுகணைகளை வாங்க கடந்த 2018-ம் ஆண்டில் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதுவரை 3 எஸ் 400 ஏவுகணைகளை ரஷ்யா வழங்கியிருக்கிறது. மீதமுள்ள 2 தொகுப்புகள் அடுத்த ஆண்டில் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மே மாதம் இந்தியா – பாகிஸ்தான் இடையே 4 நாட்கள் அதிதீவிர போர் நடைபெற்றது. அப்போது, இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின் போது எஸ்-400 ஏவுகணைகள் மிக முக்கிய பங்கு வகித்தன.
அதேவேளை,ஈ ரஷ்யாவிடம் இருந்து எஸ்யு-57 ரக போர் விமானங்களை வாங்குவது தொடர்பாகவும் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
இந்த போர் விமானங்களுக்கான தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு வழங்க ரஷ்யா முன்வந்திருக்கிறது.
