ராசி இல்லாத ராஜா – அரசியலில் ரணில் கடந்துவந்த பாதை….!

இலங்கை அரசியல் வரலாற்றிலேயே தொடர்ச்சியாக  42 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து சாதனை படைத்துள்ள ரணில் விக்கிரமசிங்க, கொழும்பு மாவட்டத்தில் 5 பொதுத்தேர்தல்களில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றும் சாதனை நிகழ்த்தியிருந்த நிலையில் இம்முறை படுதோல்வியடைந்துள்ளார். இது ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் வாழ்வில் பெரும் தோல்வியாகக் கருதப்படுகின்றது.

ஐக்கிய தேசியக்கட்சிக்கு தேசியப்பட்டியல்மூலம் ஆசனமொன்று கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், அதன் ஊடாக ரணில் விக்கிரமசிங்க சபைக்கு வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்டாலும் மக்கள் நீதிமன்றம் முன் அவர் தோல்வியடைந்துள்ளார்.

அரசியலில் தந்திரம், மந்திரம், நெளிவு, சுழிவு, சூழ்ச்சி, சதி என அத்தனை அம்சங்களையும் கரைத்து குடித்துள்ள ரணில் விக்கிரமசிங்க, கால்நூற்றாண்டுக்கு மேலாக ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைப்பதவியையும் தக்கவைத்துக்கொண்டுள்ளார்.

இதுவும்கூட ஒருவகையான சாதனையாகவே பார்க்கப்படுகின்றது. ஏனெனில் இதற்கு முன்னர் ஐ.தே.கவுக்கு தலைமை தாங்கியவர்கள் இத்தனை ஆண்டுகள் பதவியில் நீடிக்கவில்லை.

1947  முதல் 2015 வரை நடைபெற்றுள்ள 15 பொதுத்தேர்தல்களிலும் ஐக்கிய தேசியக்கட்சி யானை சின்னத்திலேயே போட்டியிட்டது. இதில் 5 தேர்தல்களுக்கு ரணில் விக்கிரமசிங்க தலைமை வழங்கியுள்ளார். இரண்டு தேர்தல்களில் மட்டுமே ஐ.தே.கவால் வெற்றிநடைபோடமுடிந்தது. (2001,2015).

இதற்கு முன்னரும் ஐக்கிய தேசியக்கட்சிக்குள் பிளவுகள் ஏற்பட்டிருந்தன. முக்கிய உறுப்பினர்கள் வெளியேறியிருந்தனர். ஆனால், சஜித் தலைமையிலான அணியின் வெளியேற்றமே பெரும் தாக்கமாக கருதப்படுகின்றது. பொதுத்தேர்தலில் ஒரு தொகுதியைக்கூட கைப்பற்றமுடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக ஐக்கிய தேசியக்கட்சியால் பிரதான எதிர்க்கட்சி என்ற பதவியைக்கூட தக்கவைத்துக்கொள்ள முடியாமல் போயுள்ளது, கொழும்பு மாவட்டத்தில் விருப்புவாக்கு பட்டியலில் ரணிலுக்கு இடமே இல்லை என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.

ரணில் சந்தித்த பொதுத்தேர்தல்கள்…….

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க 1970 ஆம் ஆண்டுமுதல் செயற்பாட்டு அரசியலில் இறங்கினாலும் 1977 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில்தான் முதல் தடவையாக போட்டியிட்டார்.

1977 ஜுலை 21 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் கம்பஹா மாவட்டத்திலுள்ள பியகம தொகுதியில் – கன்னி தேர்தலை எதிர்கொண்ட ரணில் விக்கிரமசிங்க, 22 ஆயிரத்து 45 வாக்குகளைப் பெற்று பாராளுமன்ற அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். இத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி ஆறில் ஐந்து பெரும்பான்மையைப்பெற்றது. ஜே.ஆர்.ஜயவர்தனவே தலைமைத்துவம் வழங்கினார்.

1978 இல் புதிய அரசியல் யாப்பு இயற்றப்பட்ட பின்னர், சர்வஜன வாக்கெடுப்புமூலம் பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் மேலுமொரு தவணைக்கு நீடிக்கப்பட்டதால்  பொதுத்தேர்தல் 1989 இல்தான் நடைபெற்றது. இத்தேர்தலிலும் ரணில் விக்கிரமசிங்க கம்பஹா மாவட்டத்தில் களமிறங்கினார். 86 ஆயிரத்து 477 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.

ரணசிங்க பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சியே தேர்தலில் வெற்றிபெற்றது. கொழும்பு மாவட்டத்தையும் கைப்பற்றியது.

1994 ஆகஸ்ட் 16 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் களமிறங்கிய ரணில் விக்கிரமசிங்க, 2 லட்சத்து 91 ஆயிரத்து 194 வாக்குகளைப்பெற்று மாவட்டத்தில் முதலிடம் பிடித்தார். எனினும், இத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி தோல்விகண்டது. சந்திரிக்கா தலைமையிலான மக்கள் கூட்டணி வெற்றிபெற்றது. கொழும்பு மாவட்டத்தில் ஐ.தே.க. இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டது.

இத்தேர்தலின் பின்னர் 1994 இல் கட்சி தலைவராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டார். கட்சியிலிருந்து வெளியேறி மீண்டும் தாய்வீடு திரும்பிய காமினி திஸாநாயக்க பிரதான எதிர்க்கட்சி தலைவரானார்.

2000 ஒக்டோபர் 10 ஆம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பிரதம வேட்பாளராக கொழும்பு மாவட்டத்தில் களமிறங்கிய ரணில் விக்கிரமசிங்க 3 லட்சத்து 63 ஆயிரத்து 668 வாக்குகளைப்பெற்றார். இத்தேர்தலில் மக்கள் கூட்டணி வெற்றிபெற்றிருந்தாலும் கொழும்பு மாவட்டத்தில் ஐ.தே.கவே வெற்றிநடைபோட்டது. 10 ஆசனங்களைக் கைப்பற்றியது.

எனினும், 11 மாதங்களில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு,2001 டிசம்பர் 05 ஆம் திகதி தேர்தல் நடைபெற்றது.  இத்தேர்தலில் ஐ.தே.க. வெற்றிபெற்றது. 4 லட்சத்து 15 ஆயிரத்து 686 வாக்குகளைப்பெற்று கொழும்பு மாவட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க முதலிடம் பிடித்தார். ஐ.தே.க.வே கொழும்பு மாவட்டத்தில் வெற்றிநடைபோட்டது.

2004 ஏப்ரல் 02 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் கொழும்பில் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்க, 3 லட்சத்து 29 ஆயிரத்து 524 விருப்பு வாக்குகளைப்பெற்று வெற்றிபெற்றார். இத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றிபெற்றிருந்தாலும் கொழும்பு மாவட்டத்தில் ஐ.தே.கவே வெற்றிக்கொடி நாட்டி, 9 ஆசனங்களைக் கைப்பற்றியது.

2010 நடைபெற்ற பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் களமிறங்கிய ரணில் விக்கிரமசிங்க, 2 லட்சத்து 32 ஆயிரத்து 957 வாக்குகளைப்பெற்று ஐ.தே.க. பட்டியலில் முதலிடம் பிடித்தாலும் மாவட்டத்தில் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டார். விமல்வீரவன்ஸவே முதலிடம் பிடித்தார். கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே 10 ஆசனங்களைக் கைப்பற்றி முன்னிலை வகித்தது.

2015 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்தார். 5 லட்சத்து 566 விருப்பு வாக்குகளைப் பெற்றார். பொதுத்தேர்தலில் வேட்பாளர் ஒருவர் பெற்ற அதிகூடிய விருப்பு வாக்குகள் இதுவாகும்.

இதற்கு முன்னர் 1994 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் சந்திரிக்கா அம்மையார் கம்பஹா மாவட்டத்தில் 4 லட்சத்து 64 ஆயிரத்து 588 வாக்குகளைப் பெற்றிருந்தார்.கொழும்பு மாவட்டத்திலும் ஐ.தே.கவே கோலோச்சியது.

2020 பொதுத்தேர்தலில் அவர் தோல்வியடைந்துள்ளார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles