ராஜராஜ சோழனுக்கு தமிழகத்தில் பிரமாண்ட சிலை: மோடி உறுதி!

மாமன்னர்கள் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு தமிழகத்தில் பிரம்மாண்ட சிலைகள் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

ராஜேந்திர சோழனின் பிறந்த நட்சத்திர மான ஆடி திருவாதிரை விழா, கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா என முப்பெரும் விழா கடந்த 23-ம் திகதி ஆரம்பமாகியது.

விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு உறுதியளித்தார்.

‘ராஜராஜ சோழனும், அவரது மகன் ராஜேந்திர சோழனும் இந்தியாவின் அடையாளம் மற்றும் பெருமைக்குரியவர்கள். சோழரசின் வரலாறு மற்றும் பாரம்பரியம் நாட்டின் வலிமையும், திறனையும் பிரதிபலிக்கிறது. சோழர்களின் காலம் இந்திய வரலாற்றில் பொற்காலமாகும். ராஜேந்திர சோழன் கட்டிய கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில், உலகம் முழுவதும் கட்டிடக் கலையின் அதிசயமாக பார்க்கப்படுகிறது.

சோழர்களின் காலத்தில் இந்தியா அடைந்த பொருளாதார வளர்ச்சி, தற்போதும் நம்மை ஊக்குவிக்கிறது. ராஜராஜ சோழன் சக்திவாய்ந்த கடற்படையை உருவாக்கினார். ராஜேந்திர சோழர் அதை மேலும் வலுப்படுத்தினார். சோழர்கள் இலங்கை, மாலத்தீவுகள், தென்கிழக்காசிய நாடுகளுடன் தூதரகம் மற்றும் வர்த்தக உறவுகளை வளர்த்தனர்.

ராஜேந்திர சோழன் கங்கை நீரை பொன்னேரியில் ஊற்றினார். இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில், காசியில் இருந்து கங்கை நீர் தற்போது மீண்டும் கங்கைகொண்ட சோழபுரத்துக்கு கொண்டுவரப்பட்டது.

சோழர்கள் கடற்படை, வரி அமைப்புகள், நகராட்சி நிர்வாகங்கள் மூலம் வலிமையான அரசை உருவாக்கினர். இந்தியாவின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி, ஆபரேஷன் சிந்தூர் மூலம் உலகம் தற்போது இந்தியாவின் உறுதியான நடவடிக்கைகளை பார்த்து வியக்கிறது.

ராஜேந்திர சோழன் தனது தந்தையின் கோயிலைவிட உயரம் குறைந்த விமானம் அமைத்தார். இது தாழ்மையின் அடையாளம். அவ்வாறு புகழ்பெற்ற ராஜராஜ சோழனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் தமிழகத்தில் பிரம்மாண்ட சிலைகள் அமைக்கப்படும்.” – என பிரதமர் மோடி மேலும் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles