மலையக மற்றும் பெருந்தோட்ட உழைக்கும் மக்களுக்கு சிறுநில தேயிலை தோட்டத்துக்கான உரிமையையையும், வீட்டுக்கான உரிமையையையும் பெற்றுத் தருவேன் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ அண்மைக் காலங்களில் ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள் சகலரும் மலையக, பெருந்தோட்ட சமூகத்தை பொய்யான கூற்றுக்களாலும், வாக்குறுதிகளாலும் ஏமாற்றி வந்தாலும், ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் பெருந்தோட்ட மக்களின் லயன் அறை வடிவிலான இருப்பிடவசதிகளினாலான வாழ்க்கை முறையையும், தோட்டத் தொழிலாளர்கள் என்ற வாழ்க்கையையும் முடிவுக்குக் கொண்டு வருவேன்.
சிறிய தேயிலைத் தோட்டத்துக்கான உரிமையாளர்களாக்கி, தனது சொந்த தேயிலை தோட்டத்தில் தனக்கென சொந்த வீட்டை நிர்மாணித்து, தேயிலை தோட்டத்தை பராமரித்து, சிறுநில தேயிலைத் தோட்ட உரிமையாளராக தேயிலை உற்பத்திக்கு பங்களிப்பதற்கான வரத்தைப் பெற்றுத் தருவேன்.
நிறைவேற்றப்படாத பல தேவைகளையும், தரங்குன்றிய வாழ்க்கை முறையையும் முடிவுக்குக் கொண்டு வருவேன். தேசிய நீரோட்டத்தில் அவர்களைச் சங்கமிக்கச் செய்வேன். அதனாலேற்படும் முன்னேற்றங்களால் பாராபட்சங்களை நீக்கி, செந்த காலில் நிற்கும் யுகத்தை பெருந்தோட்ட மக்களுக்கு உருவாக்கித் தருவேன்.
மலையக மற்றும் பெருந்தோட்ட சமூகங்களுக்கு செய்கைகள் மேற்கொள்ளப்படாத காணிகளைக் கொடுத்து அவர்களை வீட்டு உரிமையாளராகவும், தோட்ட உரிமையாளராகவும் மாற்றும் யுகத்தை நாம் உருவாக்கித் தருவோம். சில நன்மைகளை மட்டுமே அனுபவித்து வரும் இச்சமூகத்துக்கு நாட்டின் ஏனைய பிரதேச மக்கள் அனுபவித்து வரும் பல நன்மைகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பேன். ஒப்பீட்டு ரீதியில் பின்தங்கிய நிலையை மாற்றியமைக்க நடவடிக்கை எடுப்பேன்.
வீட்டுவசதி, கல்வி, போக்குவரத்து, மின்சாரம், சுகாதாரம் போன்றவற்றில் அபிவிருத்தியை ஏற்படுத்தி வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன். பெருந்தோட்ட வறுமையை நீக்குவதற்கான ஏற்பாடுகளை ஆரம்பிப்பேன். மலையக மற்றும் பெருந்தோட்ட மனித வளங்களின் இயலுமைகளையும் ஆற்றல்களையும் கட்டியெழுப்பி, நாட்டின் மொத்த தேசிய உற்பத்திக்கு பங்களிப்பை நல்குவோராக மாற்றும் நடவடிக்கையை முன்னெடுப்பேன் எனவும் சஜித் குறிப்பிட்டுள்ளார்.