வடக்கிலும், தெற்கிலும் இனவாதம் தலைதூக்க இடமளியோம்!

இன்றும் கூட, சிலர் தொல்பொருள் நினைவுச்சின்னங்கள் அல்லது மதத் தளங்களை மையமாகக் கொண்டு, ஆங்காங்கே இன மோதல்களைத் தூண்ட முயற்சித்தாலும், வடக்கு, தெற்கு, கிழக்கு அல்லது வேறு எந்த இடத்திலும் இனவாதம் மீண்டும் தலைதூக்க இடமளிக்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

மேலும், யுத்தத்தினால் இடம்பெயர்ந்த அனைத்து மக்களின் வீட்டுப் பிரச்சினையும் தனது பதவிக் காலத்தில் தீர்க்கப்படும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இன்று (16) முற்பகல் சாவகச்சேரி, மீசாலை, வீரசிங்கம் ஆரம்பப் பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற, யுத்தத்தினால் இடம்பெயர்ந்த குடும்பங்களின் மீள்குடியேற்றத்திற்காக 2,500 வீடுகளை நிர்மாணித்தல் உட்பட நாடு முழுவதும் 31,218 குடும்பங்களுக்காக வீடுகளை நிர்மாணிக்கும் “தமெக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ தேசிய வீட்டுத் திட்டம் 2026”

அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகோண்ட போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனை தெரிவித்தார்.

வட மாகாணத்தை விரிவான அபிவிருத்திக்கு உட்படுத்தி அந்த மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தியுள்ளது என்று நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.

சுற்றுலாத் துறையை மேம்படுத்தக் கூடிய அழகிய கடற்கரைகளும், பல கவர்ச்சிகரமான இடங்களும் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ளதுன என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்காக, பலாலி விமான நிலையத்தைப் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், காங்கேசன்துறை துறைமுகப் பணிகளை உடனடியாகத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதற்காக இந்திய அரசாங்கம் 60 மில்லியன் டொலர் நிதி உதவியை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

முதல் முறையாக யாழ்ப்பாண மக்கள் நம்பிக்கை வைக்கும் ஒரு அரசாங்கம் இன்று நாட்டில் உருவாகி இருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அந்த நம்பிக்கை ஒரு துளி கூட மீற இடமளிக்கப்பட மாட்டாது என்றும் உள்ளங்களை ஒன்றிணைத்து, பிள்ளைகளுக்காக மோதலற்ற, ஒற்றுமையுடன் வாழக்கூடிய நாட்டை உருவாக்க ஒன்றிணையுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,

குறிப்பாக யுத்தத்தினால் பெருமளவான வீடுகள் சேதமடைந்தன. நீண்டகாலம் சென்ற போதும் அந்த வீடுகள் முழுமையாக நிர்மாணிக்கப்பட்டு நிறைவு செய்யப்படவில்லை.யாழ்ப்பாண மாவட்டத்தில் வாழும் அநேகமானோர் யுத்த சமயத்திலும் இடம்பெயர்ந்திருந்தார்கள். யுத்தத்தின் பின்னரும் இடம்பெயர்ந்திருந்தார்கள். நீண்டகாலமாக தமக்கென வீடோ, இடமோ இன்றி அவர்கள் வாழ்வது நியாயமல்ல.

எமது ஆட்சிக் காலத்திற்குள் யுத்தத்தினால் இடம்பெயர்ந்துள்ள அனைத்து மக்களினதும் வீட்டுப் பிரச்சினையை நாம் தீர்ப்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

இந்த பிரதேச மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் எமது அரசாங்கத்தை உருவாக்க பங்களித்தார்கள்.ஆட்சியில் இருக்கும் தரப்பினருக்கு எதிரான மற்றும் உடன்பாடற்ற நிலைப்பாடே நீண்டகாலமாக இங்கு காணப்பட்டது. அதில் தவறில்லை. அரசாங்கம் இனவாதத்தை போசிப்பதாகவோ மக்களின் சொத்துக்களை திருடுவதாகவோ பொதுமக்கள் குறித்து சிந்திக்காமல் இருந்தாலோ அல்லது அரசாங்கம் தம்மைப் பற்றி மாத்திரமே சிந்திப்பதாக இருக்குமாயின் அரசாங்கமும் மக்களும் தூரமாவதை தடுக்க முடியாது.

ஏனென்றால் அவை மக்களுக்கு எதிரான முரண்பாடுகளை உருவாக்கும் அரசாங்கங்கள். தங்களையும் தங்கள் குடும்பத்தையும் பற்றி மாத்திரம் சிந்திக்கும் அரசாங்கங்களாகவே அவை இருந்தன.ஆனால் இலங்கை வரலாற்றில் முதன்முறையாக நாட்டின் பொதுமக்களின் அரசாங்கம் உருவாக்கப்பட்டது. தேர்தல் சமயங்களில் மக்களின் மனங்களில் குறிப்பாக வடபகுதி மக்களிடையே எம்மைப்பற்றி குழப்பமும் தெளிவின்மையும் இருந்திருக்கும். எம்மை ஆட்சிபீடமேற்ற வாக்களித்தாலும் சந்தேகத்துடன் தான் வாக்களித்திருக்கலாம்.

எமது அரசாங்கம் உருவாகி ஒரு வருடத்திற்கு சற்று கூடுதல் காலம் சென்றுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நீங்கள் நம்பிக்கை வைக்கக் கூடிய அரசாங்கம் முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ளது.முதலில் கீழ்மட்டத்தில் உள்ள மக்களின் கஷ்டங்களை தீர்க்க வேண்டும். அரசாங்கமென்ற வகையில் எம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.வீடற்றவர்களுக்கு வீட்டை வழங்க நடவடிக்கை எடுப்போம்.பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்க வேண்டும். வரலாற்றில் அதிக தொகையை அதற்காக ஒதுக்கியுள்ளோம்.

மக்களுக்கு சிறந்த வருமான வழியை அமைக்க வேண்டும். குறிப்பாக விவசாயத்துறை,தெங்குப் பயிர்ச்செய்கை, மீன்பிடித்துறை மற்றும் சிறிய கைத்தொழிற்துறைகள் என்பன இப்பிரதேச மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. அந்த அனைத்துக் கைத்தொழிற்துறைகளுக்கும் ஆதரவு வழங்கி மக்களின் வாழ்க்கை நிலையை, இருப்பதை விட உயர்ந்த நிலைக்கு மேம்படுத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். இது அதற்காக பாடுபடும் அரசாங்கம். அது மட்டும் எமக்கு போதுமானதல்ல.நீண்டகாலமாக எமது வாழ்வில் பெரும்பகுதியை யுத்தத்துடனே கழித்தோம்.

மோதல்களுக்கு மத்தியில் வாழ்ந்தோம். சந்தேகத்துடன் வாழ்ந்தோம். குரோதத்துடன் வாழ்ந்தோம். தமிழ் மக்கள் குறித்து சிங்கள இனவாதக் குழுக்கள் சந்தேகமாக பார்த்தன.சிங்கள மக்கள் குறித்து தமிழ் இனவாதக் குழுக்கள் சந்தேகக் கண்கொண்டு நோக்கின.நீண்டகாலமாக முரண்பாடுகள் நீடித்தன.அந்த மோதலினால் எவருக்கும் பலன் கிடைக்கவில்லை. அந்த மோதலினால் எஞ்சியது எதுவும் இல்லை.

வீடுகளை இழந்த குடும்பங்கள்,பெற்றோர்களை இழந்த பிள்ளைகள், பொருளாதாரத்தில் முழுமையான வீழ்ச்சி என்பவை தான் கிடைத்தன. உற்றார் உறவினர்களை இழக்க நேரிட்டது. வடக்கு தெற்கு இரண்டிலுமுள்ளோர் இந்த அழிவினால் பாதிக்கப்பட்டனர்.இந்த முழு அழிவின் பின்னாலும் அரசியல் தான் இருந்தது. அதிகாரத்தைப் பெறுவதற்காக சிங்கள மக்களை தூண்டிவிட்டார்கள்.அதிகாரத்தைப் பெறுவதற்காக தமிழ் மக்களை தூண்டிவிட்டார்கள்.இவ்வாறான இனவாத அரசியல் தான் முன்னர் காணப்பட்டது.இன்றும் ஆங்காங்கே அந்த நிலைமை இருக்கிறது.

தொல்பொருள் விடயத்தை முன்வைத்து அல்லது ஒரு மத ஸ்தலத்தை காரணம் காட்டி இந்த இனவாத முரண்பாடுகளை தூண்டிவிடப் பார்க்கிறார்கள்.மீண்டும் எமது நாட்டில் வடக்கிலோ, தெற்கிலோ, கிழக்கிலோ நாட்டின் எப்பகுதியிலும் சிங்களவரோ தமிழரோ முஸ்லிமோ எந்த ஒரு இனவாதத்திற்கும் இடமளிக்க மாட்டோம் என உங்களுக்கு ஒரு உத்தரவாதத்தை தருகிறேன். நாம் அனைவரும் சகோதரத்துவத்துடனும் ஒற்றுமையுடனும் வாழும் நாடு தேவை.அதேபோன்று , சிறப்பான பொருளாதா நிலையுள்ள பொழுதுபோக்குள்ள மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை எமக்கு அவசியம்.

யாழ்ப்பாணத்தில் பாரிய விளையாட்டு மைதானமொன்றை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளோம்.அதில் சில சிக்கல்கள் உருவாகியுள்ளன. அதனை எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்து நேற்று மாவட்ட செயலாளருடன் கலந்துரையாடினேன்.அதற்கான பணிகளை இந்த வருடத்திற்குள் துரிதமாக நிறைவு செய்ய உள்ளோம். பிள்ளைகளுக்கு விளையாடுவதற்காக, அவர்களுக்கு தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்த, பொழுதுபோக்காக வாழக்கூடிய வாய்ப்பை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

யாழ்மாவட்டத்தில் உள்ளக விளையாட்டரங்கொன்றை உருவாக்க திட்டமிட்டோம்.ஆனால் அரசியல்வாதிகளின் ஊடாக வழக்கு தொடரப்பட்டது. யாழ்ப்பாண பிள்ளைகளுக்கு அது அவசியமானது. ஆனால் அரசியல்வாதிகள் வழக்குத் தொடர்கின்றனர்.அதாவது அவர்கள் மக்களுக்கு எதிரான அரசியலை செய்கிறார்கள். நாம் மிக விரைவில் அந்த வழக்கை நிறைவு செய்து அதே இடத்திலோ அல்லது அதற்கு அண்மித்த பகுதியில் அந்த உள்ளக விளையாட்டரங்கின் பணிகளை நிறைவு செய்ய எதிர்பார்க்கிறோம்.

அதேபோன்று சுற்றுலாத்துறையின் ஊடாக பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பு கிடைக்கிறது.யாழ் மாவட்டம் மிகவும் ரம்யமான கடற்கரையைக் கொண்டுள்ளது. மக்களை கவரக்கூடிய பல பிரதேசங்கள் உள்ளன. இருந்தாலும் இன்னும் பலமான சுற்றுலாத்துறை கிடையாது.

பலாலி விமான நிலையத்திலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து அதனை மறுசீரமைக்க எதிர்பார்க்கிறோம்.மிகவிரைவில் காங்கேசன்துறை துறைமுக பணிகளை ஆரம்பிக்க இருக்கிறோம்.இந்திய அரசாங்கம் 60 மில்லியன் டொலர் உதவியை வழங்க உடன்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் மிக முன்னேற்றகரமான சுற்றுலாத்துறையை ஆரம்பிக்க எதிர்பார்க்கிறோம்.அதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களுக்கு சிறந்த தொழில்கள் அவசியம். சிறந்த பொருளாதாரம் அவசியமானது.மக்களுக்கு பொருளாதார வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.எமது பொறுப்பை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம்.

இங்குள்ள பெற்றோர்கள், சகோதர சகோதரிகள்,தமது வாழ்நாளில் முதன் முறையாக ஜனாதிபதி, அமைச்சர்கள்,அமைச்சின் செயலாளர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் கலந்து கொள்வதாக இருக்கும் என கருதுகிறேன்.

சந்தேகத்தையும் அவநம்பிக்கையையும் ஒதுக்க வேண்டும்.எமது சந்ததி யுத்தம் செய்து கொண்டது.எமது சந்ததி மோதிக் கொண்டது.எமது பிள்ளைகளின் சந்ததிக்கு மோதலற்ற நாட்டை ,யுத்தமில்லாத நாட்டை ஒற்றுமையாக வாழும் நாட்டை உருவாக்க வேண்டும்.அதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.

துணிச்சலான செயற்பாட்டை இந்த பெற்றோர் மற்றும் சகோதர சகோதரிகள் மேற்கொண்டார்கள். நேரில் கண்டிறாத எம்மை ,கேள்விப்படாத எம்மை, நம்பி இணைந்திருக்கிறீர்கள்.நாம் ஆட்சியமைக்க நீங்கள் பங்களித்திருக்கிறீர்கள்.நீங்கள் எம்மீது நம்பிக்கை வைத்துள்ளீர்கள். நீங்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை எந்த வகையிலும் மீறாமல் மென்மேலும் நம்பிக்கை ஏற்படும் வகையில் அன்பு, நெருக்கம் அதிகரிக்கும் அரசாங்கம் மற்றும் மேம்படுத்தும் தலைவர்களாக நாமிருப்போம்.நீங்கள் எம்மை விட்டும் ஒதுங்கிச் செல்லாதது போன்றே நாமும் உங்களை விட்டும் விலக மாட்டோம்.

நாம் இணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்புவோம். அதற்காக அனைவரும் சகோததரத்துவத்துடனும் குறிக்கோளுடனும் இணைந்து செயற்படுமாறு அழைப்பு விடுக்கிறேன்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles