வடக்கில் மீனவரின் நீண்டநாள் இருப்பை அழிக்க நினைக்கும் சீனா! கடல் அட்டைப் பண்ணைத் திட்டத்திற்கு பாரிய முதலீடு!

இலங்கையின் வடக்குப் பிரதேசத்தில் ஏற்றுமதியை நோக்காகக் கொண்ட கடல் அட்டை வளர்ப்புப் பண்ணைகள் தற்போது அசுர வேகத்தில் வியாபித்து வருகின்றன.

இந்த கடல் அட்டைப் பண்ணைகள் கரையோத்தை அண்டி,  ஆழம் குறைந்த கடற்பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இதற்காக பல ஏக்கர் பரப்புள்ள காணிகள் தனியாருக்கு வழங்கப்படுகின்றது. இதில் நல்ல வருமானம் கிடைப்பதாகவும் கடல் அட்டை வளர்ப்பில் ஈடுபடுவோர் தெரிவிக்கின்றனர்.

”மன்னார் பிரதேசத்தில் ஒரு கடல் அட்டை பண்ணையாளர் தனது வருமானத்தைப் பட்டியலிடுகிறார். சுமார் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் அவர் தனது பண்ணையை முன்னெடுத்து வருகிறார். 20 லட்சம் ரூபா முதலீடு தேவை. வலை, கடல் அட்டை குஞ்சுகள், வேலையாட்கள் என முதல் ஆறு மாதங்களுக்கு 20 லட்ச ரூபா செலவுகள் ஏற்படுகிறது. இந்த கடல் அட்டைகள் வெறுமனே சேற்றை உணவாக உண்கின்றன. எனவே, உணவுச் செலவு மிச்சம். ஆறு மாதங்களின் பின்னர் பெறும் அறுவடையில் சுமார் 50 முதல் 60 லட்சம் ரூபா வரை வருமானம் கிடைக்கிறது. இதில் செலவுகள் போக சுமார் 30 லட்ச ரூபா வருமானம் கிடைக்கிறது. ஒரு கிலாகிராம் ஏற்றுமதிக்கான கடல் அட்டைகளைப் பெறுவதற்காக சுமார் 60 கிலோ கிராம் கடல் அட்டைகளை அறுவடை செய்து, காய வைத்து, பதனிட வேண்டும்” என்றும் அவர் விபரித்தார்.

பொருளாதார ரீதியாக இந்த கைத்தொழில் அசுர வேகத்தில வளர்ந்து வருகிறது. இதற்காக 5000 ஏக்கர் நிலப்பரப்பை ஒதுக்குவதற்கு ஆராய்ந்து வருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார். இந்த கடல் அட்டைகள் சீனா, சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

நல்ல இலாபம் கிடைக்கிறது. நாமும் இந்தத் தொழிலை செய்துபார்க்கலாம் என்று பலரும் இதில் களமிறங்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் இப்படி களமிறங்கும் பெரும்பாலானவர்கள் முதலீட்டாளர்களாகவே இருக்கின்றனர். அல்லது சீனாவின் உதவியுடன் மீனவர்கள் கடல் அட்டை வளர்ப்பிற்கு ஊக்குவிக்கப்படுகின்றார்கள்.

இவ்வாறு திடீரென்று வியாபித்து வரும் கடல் அட்டை வளர்ப்பினால், சிறு மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தையும் உரிமையையும் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கரையோரப் பிரதேங்களை அண்டி இந்த பண்ணைகள் அமைக்கப்படுவதால் அன்றாட மீன்பிடித் தொழிலை முன்னெடுப்பதில் பெரும் சிரமங்கள் ஏற்படுகின்றன.

யாழ்ப்பாணத்தில், அரியாலை, அல்லைப்பிட்டி, புங்குடுதீவு ஆகிய பிரதேசங்களில் இந்தப் பண்ணைகள் அதிகரித்துள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரியின் கிராஞ்சி, வலைப்பாடு, வேரவில், பள்ளிக்குடா, நாச்சிக்குடா, இரணதீவு ஆகிய பிரதேசங்களிலும் இந்தப் பண்ணைகளைக் காண முடிகின்றது.

இந்தப் பண்ணைகள் அரசாங்கத்தின் கடற்றெரிழல் நீரியல் வளத் திணைக்களத்தின், தேசிய நீரியல் வள மற்றும் ஆராய்ச்சி முகவர் அமைப்பின் (நாரா) ஆலோசனையின் அடிப்படையிலேயே அமைக்கப்பட்டு வருகின்றன.

மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இந்தப் பண்ணைகள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன.

இதேபோன்று பல வருடங்களுக்கு முன்னர் இறால் பண்ணைகள் குறுகிய காலத்தில் பெருகியதைப் பார்க்க முடிந்தது. ஆரம்பத்தில் இலாபம் கொட்டியது. ஆனால், திடீரென்று வெள்ளைப் புள்ளி நோய் தாக்கம் ஏற்பட்டு, அதில் முதலீடு செய்தவர்கள் பெரும் நட்டத்தை ஏற்படுத்தியது.

தற்போது இந்த கடல் அட்டை வளர்க்கும் பண்ணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவற்றை ஏன் சீனா ஊக்குவிக்கிறது என்ற பலமான சந்தேகம் இருக்கிறது. மனித வளமும், இடவளமும் சீனாவில் குவிந்துள்ள நிலையில் இலங்கையில் ஏன் சீனா, இவ்வளவு அக்கறைக் காட்டுகிறது என்ற வலுவான சந்தேகம் ஏற்படுகிறது.

கடல் அட்டை சந்தையில் சீனாவையே தங்கியிருக்க வேண்டும். அதீத இலாபம் கிடைத்து கடல் அட்டைப் பண்ணை வளர்ப்பில் பெரும்பாலானவர்கள் ஈடுபடுவது பொருளாதார ரீதியாக சீனாவிடம் சிக்கிவிடும் அபாயமும் இருக்கிறது. இதனால் சிறு மீனவர்கள் தமது மீன்பிடித் தொழில்களை முன்னெடுக்க முடியாத நிலையும் ஏற்படுகிறது. திடீரென்று கடல் அட்டைப் பண்ணைகளில் சிக்கல்கள் ஏற்படும் பட்சத்தில், அதன்பின்னர் மீனவர்கள் தமது பாரம்பரிய மீன்பிடித் தொழிலைக்கூட மீண்டும் ஆரம்பிக்க முடியாத நிலையும் ஏற்படக்கூடும்.

இலங்கையின் கடற்பிரதேசத்தில் வடக்கில் சிறந்த மீன் வளம் இருப்பதை அனைவரும் அறிவோம். தெற்கில் இருந்துகூட மீனவர்கள் வடக்கு கடல் பிரதேசத்திற்கு வந்து மீன்பிடியில் ஈடுபடுவதாக வடக்கு மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். சிறந்த மீன்வளம் உள்ள பிரதேசத்தில் மீனவர்கள் இவ்வாறு கடல் அட்டைப் பண்ணைத் தொழிலில் ஈடுபடுவதும், இதனால் சிறு மீனவர்கள் வேறு தொழிலை நாடிச் செல்வதும் எதிர்காலத்தில் மீன்பிடித் தொழில்துறையில் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடும்.

2010 முதல் 2014ஆம் ஆண்டு காலப்பகுதிகள் ராஜபக்ச ஆட்சியின் போது சீன ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளுக்கு இலங்கையின் வடக்கு கடற்பரப்பில்  மீன்பிடிக்க அனுமதி வழங்கத் தயாராகி வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டது. பலத்த எதிர்ப்புக்களினால் இந்த தீர்மானம் மீளப்பெறப்பட்டிருக்கலாம். இந்த நிலையில், தான் வடக்கு மீனவர்களின் கவனம் திசை திருப்பப்பட்டு தற்போது கடல் அட்டை வளர்ப்பு வியாபாரம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளதாக சந்தேகங்கள் எழுகின்றன. சீனாவும் இதில் அதீத கவனமும், ஆர்வமும் செலுத்தி வருகிறது. தற்போது டொலர்கள் கொட்டினாலும், எதிர்காலம் என்னவாகும் என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.

Related Articles

Latest Articles