வடக்கு, கிழக்கில் இன்று மாபெரும் போராட்டங்கள்

சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் பெரும் கவனவீர்ப்புப் போராட்டங்கள் இன்று செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளன.

வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடியும், அவர்களுக்கு நீதி கோரியும் கடந்த பல வருடங்களாக அவர்களின் உறவுகள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கை அரசிடம் நீதி கோரியும் கிடைக்காத நிலையில் சர்வதேசத்திடம் நீதி கோரி போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

இதுவரை தீர்வு கிடைக்காத நிலையில் சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று வடக்கு, கிழக்கில் பேரணி மற்றும் கவனவீர்ப்புப் போராட்டங்களை அவர்கள் முன்னெடுக்கவுள்ளனர்

அந்தவகையில், திருகோணமலையில் பஸ் தரிப்பிடத்திலும், அம்பாறையில் தம்பிலுவில் மத்திய சந்தையிலிருந்து திருக்கோவில் வரையும், மட்டக்களப்பில் தந்தை செல்வா சிலைப் பகுதியிலிருந்து காந்தி பூங்கா வரையிலும், வவுனியாவில் பஸ் நிலையத்திலும், முல்லைத்தீவில் கச்சேரிக்கு முன்பாகவும், யாழ்ப்பாணத்தில் நல்லை ஆதீனம் முன்பாகவும், கிளிநொச்சியில் கந்தசுவாமி கோவில் முன்றல் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் அலுவலக முன்றலிலும், மன்னாரில் பஸ் நிலையத்திலும் இன்று காலை 10 மணிக்குப் போராட்டங்கள் ஆரம்பமாகவுள்ளன என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அறிவித்துள்ளனர்.

இந்தப் போராட்டங்களில் மதத் தலைவர்கள், பொதுமக்கள், மக்கள் பிரிதிநிதிகள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு ஆதரவு தருமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதேவேளை, சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி இன்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனின் ஏற்பாட்டில் நீதி கோரல் சம்பந்தமான நிகழ்வொன்று நடைபெறவுள்ளது. நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவும் இந்த நிகழ்வில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Articles

Latest Articles