வடக்கு, கிழக்கு சித்திரவதை முகாம்கள் குறித்தும் வெளிப்படுத்த வேண்டும் அரசு

“பட்டலந்த சித்திரவதை முகாம் 37 வருடங்களுக்குப் பின்னர் வெளிவந்துள்ளது. இவ்வாறு வடக்கு, கிழக்கில் இயங்கிய பல முகாம்களில்
தமிழர்கள் படுகொலை மற்றும் சித்திரவதை செய்யப்பட்டனர். தமிழ் மக்கள் என்பதற்காக அதனை மூடிமறைத்துவிட்டு சிங்கள இளைஞர்கள் மற்றும் உங்கள் கட்சியினர் மாத்திரம் பாதிக்கப்பட்டார்கள் என்று கருத்துக் கொண்டுவந்திருப்பது கேள்விக்குறியாக உள்ளது. ஆகவே, தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியையும் தேசிய மக்கள் சக்தி வெளிக்கொண்டுவர வேண்டும்.”

– இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தற்போது பேசுபொருளாக ஊடகங்களிலும் நாடாளுமன்றத்திலும் சர்வதேசத்திலும் உரத்து ஒலித்துக் கொண்டிருக்கும் 1988 ஆம் ஆண்டு இயங்கிய பட்டலந்த சித்திரவதை முகாம் இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது.

ஜே.வி.பி. இரண்டாம் கட்டப் போராட்டத்தை மேற்கொண்டபோது அவர்களை அடக்குவதற்காகச் சட்டவிரோதமாக இந்த முகாம் செயற்பட்டு வந்திருக்கின்றது மாத்திரமல்ல முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பெயரும் உச்சரிக்கப்பட்டுள்ளது.

1994 சந்திரிகா ஆட்சிக்கு வந்தபோது இந்த பட்டலந்த முகாம் தொடர்பாக விசாரணை நடைபெற்றது. ஆனால், விசாரிக்கப்பட்ட கோவை திறக்கப்படாமல் இருட்டில் புதைத்து வைக்கப்பட்டிருக்கின்றதுடன் உண்மைகளும் புதைக்கப்பட்டுள்ளன.

37 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜே.வி.பியினர் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் புதைக்கப்பட்ட உண்மைகள் புதைகுழியிலிருந்து வெளியில் வந்துள்ளன.

இந்த ஜே.வி.பி. என்ற தேசிய மக்கள் கட்சி ஆட்சிக்கு வராவிட்டால் இந்தப் பட்டலந்த சித்திரவதை முகாம் வெளியில் வந்திருக்காது. ஆகவே, பாதிக்கப்பட்டவர்கள் இப்போது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதால்தான் இந்த சித்திரவதை முகாம் வெளியில் வந்திருக்கின்றது. எனவே, இதுபோன்ற வடக்கு, கிழக்கில் பல சட்டவிரோத முகாம்கள் காணப்பட்டன.

1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் இயங்கிய மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் படைமுகாமில் 4 கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள், முதியோர்கள், பெண்கள் உட்பட 186 பொதுமக்களைச் சித்திரவதை செய்து பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்து ஒரே இரவில் படுகொலை செய்து குழிகளில் போட்டு நிரப்பினார்கள். அதில் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் தப்பி வெளிவந்து உண்மைகளைத் தெரிவித்தார்.

இந்தச் சத்துருக்கொண்டான் முகாம் சித்திரவதை படுகொலை காணாமல் ஆக்கப்படுவதற்கு முக்கியமான முகாமாக இயங்கியது. அவ்வாறே பல முகாம்கள் இயங்கியதுடன் கொண்டு செல்லப்படுபவர்கள் திரும்பிவராதளவுக்கு கல்லடி, கரடியனாறு, கொண்டைவெட்டுவான், உட்பட பல முகாம்கள் காணப்பட்டன.

ஜே.வி.பியினர் பாதிக்கப்பட்ட விடயம் அவர்கள் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது. ஏன் என்றால் தங்களுடைய தோழர்கள், சகாக்கள் கொல்லப்பட்ட விதம், சித்திரவதை செய்யப்பட்ட விதம், அதில் பங்கு கொண்ட முக்கிய புள்ளிகள் தொடர்பாக வெளியில் வந்துள்ளது.

சித்திரவதை என்பது சாதாரண விடயமல்ல. அமிலத் தொட்டிகளில் இளைஞர்களைப் போட்டு கொலை செய்துள்ளனர்.

எங்களைப் பொறுத்தமட்டில் வடக்கு, கிழக்கில் தமிழர்கள் சார்பாகச் செயற்படுகின்ற தமிழ்த் தேசியக் கட்சிகள் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பே இல்லை. எண்ணிக்கை ரீதியாக சிறுபான்மையாக உள்ளதால் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது.

எனவே, எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் மற்றும் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களது நீதியை வெளியில் கொண்டு வரமுடியாது. ஆனால், 37 வருடங்களுக்குப் பின்னர் ஆட்சியைக் கைப்பற்றியதால்தான் இந்தச் சித்திரவதை முகாம் வெளி உலகத்துக்கு வந்துள்ளது.

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட சித்திரவதை, பாலியல், பலாத்காரம் போன்ற அநீதிகளை வெளியில் கொண்டு வருவதாக இருந்தால் நாங்களும் ஆட்சியைக் கைப்பற்றினால்தான் முடியும். ஆனால், நாங்கள் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது.

தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட படுகொலை, சித்திரவதை, அநியாயம், அராஜகத்தை வெளிக்கொண்டு வருவதற்கு வழியே இல்லை. எனவே, தேசிய மக்கள் சக்தி அரசிடம் நாங்கள் உருக்கமாகவும் நியாயமாகவும் கேட்பது உங்கள் தோழர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்பதற்காகப் பட்டலந்த சித்திரவதை முகாமை கொண்டுவந்திருப்பதாக மற்றவர்களுக்குக் கூறாமல் வடக்கு, கிழக்கு பிரதேசங்களிலும் இவ்வாறான படுகொலைகள், சித்திரவதைகள் நடந்துள்ளன போன்ற விடயங்களை நீங்கள் வெளிக்கொண்டுவருவதாக இருந்தால் நீங்கள் ஒரு சமத்துவவாதிகள்.

கிழக்கு பல்கலைக்கழகத்தில் பட்டப்பகலில் 180 இற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இன்றும் கூட புதைக்கப்பட்ட புதைகுழி எது என்று தெரியாமல் உள்ளது. இவ்வாறு பல முகாம்களில் இப்படியான அநியாயங்கள் நடந்துள்ளன. ஆகவே, தேசிய மக்கள் சக்தியினர் பட்டலந்த முகாம் ஓர் ஆரம்பப்புள்ளியாக இருந்தால் வடக்கு, கிழக்கில் முகாம்களில் இடம்பெற்ற சித்திரவதைகளை வெளிக்கொண்டுவர வேண்டும்.” – என்றார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles