வடக்கு கிழக்கு மீதான சீனாவின் திடீர் காதல்! தரமற்ற உணவுப் பொருட்களை விநியோகித்ததாக விசனம்!

இலங்கை மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்தது தற்போது மெள்ள மீண்டு வருகிறது. இந்தப் பொருளாதார நெருக்கடியில் இருந்து முழுமையாக மீள்வதற்கு இன்னும் பல ஆண்டுகள் செல்லும். தற்போது தான் அதன் வீழ்ச்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இனி மீண்டெழ வேண்டும். இதற்காக ஏராளமான அர்ப்பணிப்புக்களை இலங்கை செய்ய வேண்டியிருக்கிறது. அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் ஆகியோரின் ஊழல் மோசடிகள், பொறுப்பற்ற தீர்மானங்கள் இந்த நெருக்கடி நிலைக்கு காரணமாகும்.

மக்கள் இரவு பகலாக வரிசைகளில் நிற்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. உலகத்திடம் கையேந்தும் அவலம் ஏற்பட்டது. இந்த மிகப் பெரிய நெருக்கடிகளின் போது உலக நாடுகள் உதவ முன்வந்தன. இதில் குறிப்பாக இந்தியா மிகப் பாரிய உதவிகளை இலங்கைக்கு செய்திருந்தது. இந்தியாவின் உதவிக் கரங்கள், இலங்கை மக்களை மேலும் துன்பப்படாமல் காத்துக் கொண்டது. உலக உணவு அமைப்பு உள்ளிட்ட பல அமைப்புக்களும் சில உதவிகளைச் செய்தன. இந்தியாவின் உதவியைப் பார்த்து, சீனா தடுமாறிப் போனது. இலங்கையில் கால்பதிக்க நினைக்கும் சீனாவின் கனவுக்கு பங்கம் வந்துவிடும் என்ற அச்சத்தில், சீனாவும் ஏட்டிக்குப் போட்டியாக உதவிகளை வழங்க ஆரம்பித்தது. ஒரு நாடு அல்லது மக்கள் துன்பதில் துயலும் போது உதவி வழங்குவது என்பது மனிதாபிமான ரீதியான பண்பாகும். ஆனால் சீனா போன்ற நாடுகளிடமிருந்து அரசியல் ரீதியாக மட்டும் சில உதவிகள் வந்தது சீற்றத்தையும், சலிப்பையும் ஏற்படுத்தியிருந்தது.

இதற்கு முன்னர் மனிதாபிமான ரீதியில் சிற்சில உதவிகளை சீனா வழங்கியிருந்ததையும் மறுப்பதற்கில்லை. ஆனால் கடந்த சில வருடங்களாக சீனாவின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. வடக்கு கிழக்கில் சீனாவிற்கு திடீர் காதல் ஏற்பட்டது. திடீர் விஜயங்களை சீன அதிகாரிகள் மேற்கொண்டனர். மக்களைக் கவரும் வகையில் உதவிகளை அள்ளிவீசினர். குறிப்பாக வடக்கில், கடல் அட்டைப் பண்ணைகளை ஸ்தாபிக்க சீனா பெருமளவு உதவிகளை வழங்க ஆரம்பித்தன. ஆனால் இதற்குப் பின்னணியில் இருக்கும் ஆபத்தை வடக்கில் உள்ள பெரும்பாலான மீனவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். நீண்டகால அடிப்படையில் மீனவர்களின் இருப்புக்கு இந்த கடல்அட்டைப் பண்ணைகள் ஆபத்தானவை என்பதை இவர்கள் அறியாதிருப்பது வேதனையே.

இந்த நிலையில் தான், சீனா உலர் உணவுப் பொருட்களையும் வடக்கு கிழக்கு மக்களுக்கு வழங்க ஆரம்பித்தன. கடந்த வருடம் பெரும் நெருக்கடியில் இருந்த போது தமிழக முதல்வர் மு.கா. ஸ்டாலின் தொப்புள்கொடி உறவுகளுக்கு உதவுவோம் என்று கூறி, பெருமளவில் உலர் உணவுப் பொருட்களை அனுப்பிவைத்திருந்தார். இதனைப் பார்த்துக் கொண்டிருந்த சீனாவும் களத்தில் இறங்கியது. உலர் உணவுப் பொருட்களை விநியோகிக்கத் திட்டமிட்டது. பல அறிவிப்புக்களை வெளியிட்டது. இதற்கமைய அண்மைக்காலமாக பல உலர் உணவுப் பொருட்களை நேரடியாக சென்று பகிர்ந்தளித்திருந்தது.

கசப்பான செய்தி என்னவெனில், பகிர்ந்தளக்கப்பட்ட உலர் உணவுப் பொருட்கள், அதனை வாங்கிய மக்களின் முகங்களை சுழிக்கச் செய்தன. தரமற்ற, பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களும் இதில் இருந்ததாக மக்கள் கவலையடைந்திருந்தனர். பொதுவாகவே, சீனப் பொருட்கள் தரமற்றவை என்ற பொதுக் கருத்து சமூகத்தின் மத்தியில் இருக்கிறது. இதனை ஒப்புவிக்கும் வகையில் தற்போது சீனாவின் உலர் உணவுப் பொருள் விநியோகம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இவ்வாறு தரமற்ற பொருட்களின் விவகாரம் பெரிதாக சமூகத்திற்கு வெளிவரவில்லை. அவை கண்டறியப்பட்டு, இரகசியமாக அகற்றப்பட்டிருந்தன.

மக்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கம் சீனாவிற்கு உண்மையாக இருந்திருந்தால் இவ்வாறான சம்பவங்கள் ஏற்பட்டிருக்காது. ஆனால், திடீரென்ற வந்த காதலால், சீனா பல முயற்சிகளை எடுத்து வருகிறது. குறிப்பாக சீனா அதிகாரிகள் வடக்கிற்கு விஜயம் செய்யும்போது, கோயில்களுக்கு செல்வதையும், தமிழர் பாரம்பரிய உடைகளை அணிந்துசெல்வதையும் அவதானிக்க முடிந்தது. குறிப்பாக சீனர்கள் தமது கலை, கலாசார, பாரம்பரிய விடயங்களைப் பின்பற்றுவார்கள். ஆனால் திடீரென்று அவர்கள் வேறொரு சமூகத்தைப் பிரதிபலிக்கும் கலாசார, பாரம்பரிய விடயங்களில் கவனம் செலுத்துகிறார்கள் என்றால், அதில் உள்நோக்கம் இல்லாமல் இல்லை. இதற்கமையவே, சீனாவின் வடக்கு கிழக்கு திடீர் காதலின் பின்னணியில் அரசியல் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

நெருக்கடியான நேரத்தில் மக்களுக்கு உதவும்போது, சீனா இததைவிட மனிதாபிமான ரீதியில் நடந்துகொள்ள வேண்டும். இவ்வாறு தரமற்ற பொருட்களை பகிர்ந்தளிப்பதைவிட, அவற்றைத் தவிர்த்திருக்கலாம் என்பதே பொதுமக்களின் எண்ணமாக இருக்கிறது. தமிழர்கள் என்பது என்பது எப்போதும் கௌரவமாகவும், சுயமாியாதையுடனும் வாழ்வதை முதன்மையாகக் கொண்டுள்ளனர். இவ்வாறு ஆபத்தில் உதவுவதாகக் கூறி, மக்களின் மனங்களைக் காயப்படுத்துவது என்பது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப் போல இருக்கிறது.

Related Articles

Latest Articles