ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தொகுதி அமைப்பாளர் பதவி வடிவேல் சுரேஷ்க்கு மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்று உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் சிலர் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்
பசறை லுணுகலை தற்போதைய ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்களும் 2023 உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ள உறுப்பினர்களும் கூட்டாக கோரிக்கை.

கடந்த 9 ம் திகதி மடுல்சீமை நகரில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷின் தலைமையில் காலை 9.00 மணிக்கு ஆரம்பமானது. இத் தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வருகைத் தரவிருப்பதாக மக்களியே ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் கூட்டம் இடம்பெற்ற 9 ம் திகதி கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மடுல்சீமை வீதி 5 ம் கட்டை வரை வருகைத் தந்து சுகயீனம் காரணமாக எதிர்கட்சித் தலைவர் மீண்டும் திரும்பிச் சென்றதாக சுமார் 12.30 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷினால் மக்களிடையே அறிவிக்கப்பட்டது.
பெருந்தோட்ட தொழிலாளர்கள் தோட்ட தொழிலுக்கும் செல்லாமல் எதிர்கட்சித் தலைவரின் வருகைக்காக காத்திருந்து ஏமாற்றமடைந்ததோடு அங்கிருந்த மக்களிடையே சிறிது நேரம் பதற்ற நிலையும் ஏற்பட்டது. இதன்போது பொலிஸார் தலையிட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர்.
இவ்வேளை அன்று மாலை வெளிமடை பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் எதிர்கட்சித் தலைவர் கலந்து கொண்டிருந்தார். இவ்வேளையில் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தான் மன உளைச்சலுக்கு ஆளான தாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்தும் ஐக்கிய மக்கள் சக்தியின் சகல பதவிகளில் இருந்தும் தான் விலகுவதாக ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
எனவே தற்போது உள்ளூராட்சி தேர்தல் காலம் என்பதால் பசறை , லுணுகலை உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பாளர்கள் பாரிய மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தேர்தல் தொகுதி அமைப்பாளராக மீண்டும் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் வேண்டும் என்றும் தங்களது வெற்றிக்கு அவரது ஆதரவு வேண்டும் என பசறை, லுணுகலை ஐக்கிய மக்கள் சக்தியின் தற்போதைய உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் தற்போதைய ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களும் கூட்டாக இன்றைய இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமு தனராஜா










