ஆஸ்திரேலியாவுக்கு அருகே தெற்கு பசுபிக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான வனுவாட்டுவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
வனுவாட்டு தீவில் 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் வாழ்கின்றனர். இந்நிலையில், அங்கு நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
தலைநகர் போர்ட்டு விலாவை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. பல இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர். மேலும், 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
நிலநடுக்கத்தின்போது சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளதால் அவர்களை மீட்கும் பணிகளும் துரிதமாக நடைபெற்றுவருகின்றது. உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகின்றது.
அதேவேளை வனுவாட்டு நாட்டுக்கு மீட்புக்குழு மற்றும் மருத்துவக்குழுவை ஆஸ்திரேலியா அனுப்புகின்றது. அத்துடன், நிவாரணம் மற்றும் நிதி உதவிகளை வழங்குவதற்குரிய அறிவிப்பையும் விடுத்துள்ளது.
வனுவாட்டு தீவில் உள்ள ஆஸதிரேலியர்களுக்கு தூதரக உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன.