அன்றாடம் வரி அறவீட்டின் போது ஏற்படக்கூடிய பிரச்சினைகளை நிவர்த்திப்பதற்கான விசேட நீதிமன்றம் ஒன்றை நிறுவுதல் உள்ளிட்ட பரிந்துரைகளை ஜனாதிபதியின் அனுமதிக்காக விரைவில் கையளிக்க எதிர்பார்த்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்லாபிட்டிய தெரிவித்தார்.
அதில் வரி அறவீடு தொடர்பிலான நடைமுறைப் பிரச்சினைகளை நிவர்த்தித்தல் தொடர்பிலான விசேட பரிந்துரைகளை உள்ளடங்கியிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார அடிப்படையில் பார்க்கையில் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டியது முக்கிய விடயமாகும் என்றும் வருமான அதிகரிப்பின் போது வரி அறவீடுகளை சரியான முறையில் மேற்கொள்ள வேண்டியது முக்கியமாகும் எனவும் சுட்டிக்காட்டிய அமைச்சர், தற்போதும் வரி செலுத்தாமல் இருக்கின்ற மதுபான வகைகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் சிலவற்றுக்கு 14 தினங்களுக்கு வரிப் பணத்தை செலுத்து முடிக்குமாறு விசேட கட்டளை ஒன்று விடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
தற்போதும் நாட்டில் சுயமாக வரிச் செலுத்தும் முறைமை ஒன்றே காணப்படுவதாகவும் அதனை மிக விரைவாக மாற்றியமைக்க வேண்டியது அவசியமெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
‘ஸ்திரமான நாட்டிற்கு, அனைவரும் ஒரே வழிக்கு’ என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (28) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர்,
” 2022 ஆம் ஆண்டில் மொத்த தேசிய உற்பத்தியுடன் ஒப்பிட்டு பார்கின்ற போது வரி வருமானம் மிகக் குறைந்த அளவில் காணப்படும் ஒரு நாடாகவே இலங்கை விளங்கியது. வரி வருமானம் 7.3% ஆக காணப்பட்ட போது அரச செலவு 19 – 20% சதவீதமாக காணப்பட்டது.
அரச வருமானத்தை அதிகரித்துக்கொள்வதில் வரி சேகரிப்பு முக்கியமான காரணியாகும். வரி அதிகரிப்பினால் மாத்திரமே அரச வருமானத்தை அதிகரித்துக்கொள்ளவும் முடியும். எவ்வாறாயினும் நேரடியாகவோ மறைமுகமாகவோ வரி சேகரிப்பது இலகுவானது அல்ல. எவ்வாறாயினும் தற்போது வரி அறவீட்டுச் செயற்பாடுகள் மகிழ்ச்சிகரமான நிலையில் காணப்படுகின்றன. நாட்டின் நலன் கருதி சுயமாக வரி செலுத்திய மக்களுக்கு நன்றி. அவர்கள் ஓரளவிற்கு அரசாங்கத்தின் தேவையை புரிந்துக்கொண்டுள்ளனர்.
2022 வருடத்தின் 7.3% சதவீதமாக காணப்பட்ட அரசாங்கத்தின் வரி வருமானம் 2023 இன் முதல் காலாண்டில் 15.8% ஆக உயர்வடைந்துள்ளமை ஒரு மைல்கல் இலக்காகும். பொதுவார அரசாங்கம் நேரடியான வரி அதிகரிப்பை மேற்கொள்ளவே விரும்புகிறது. அதேபோல் தற்போதைய வரி வருமானத்தை சீராக பேணிச் செல்வது மாத்திரமே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாக உள்ளமையினால் புதிய வரிகளை அறவிடும் எதிர்பார்ப்புக்கள் அரசிடம் இல்லை.
அனைத்து சந்தர்ப்பங்களிலும் முடிந்த அளவில் மக்களுக்கு சலுகை களை பெற்றுக்கொடுப்பதற்கே அரசாங்கம் முயற்சிக்கிறது. வங்கிக் கடன் அதிகரிப்பு தொடர்பிலும் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. கடந்த வாரத்தில் அரச வங்கிகளின் வட்டி வீதம் 2.5% சதவீதத்தினால் குறைவடைந்துள்ளது. மக்களிடத்திலிருந்து வரி சேகரிக்கப்படும் போது அதற்கு இணையான வகையில் சலுகைகளை பெற்றுக்கொடுக்கவும் அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
தற்போதும் 3 இலட்சம் பேர் மாத்திரமே வரி செலுத்துகின்றனர். அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரித்துக்கொள்வதற்கு 10 இலட்சம் வரி ஆவணங்களாவது பேணப்பட வேண்டும். அதனை சரிவர செய்யும் பட்சத்தில் நாட்டின் ஒரு தொகுதி மக்கள் மீது மாத்திரம் சாட்டப்பட்டுள்ள வரிச்சுமையை மட்டுப்படுத்தலாம். வரி செலுத்துவதால் அரசாங்கத்துடனான நல்லதொரு தொடர்பாடல் உருவாகும். தனித்துவமான 14 கல்வியறிவுள்ள குழுக்களுக்காக வரிப் பத்திரங்கள் திறக்கப்படவுள்ளன. வரிச் செலுத்துபவர்களே நாட்டின் வலுவான பிரஜைகளாவர்.
அதேபோல் அரசாங்கம் மக்களிடத்திலிருந்து சேகரிக்கப்படும் வரிப்பணத்தை உரிய முறையில் செலவிடுவதில்லை. வரி பணத்தை செலவிட்ட விதம் தொடர்பில் 6 சுற்று நிருபங்கள் வாயிலாக அறிந்துகொண்ட முடிந்துள்ளது. தற்போதைய அரசாங்கத்தை போன்று சீரான முறையில் எந்த ஒரு அரசாங்கமும் வரி வருமானத்தை முகாமைத்துவம் செய்திருக்கவில்லை. அதனால் அரசாங்கம் பொது மக்களின் பணத்தை சிறந்த முறையில் பாதுகாக்கும்.