அமெரிக்க விமானப் பெருநிறுவனமான போயிங்-கிடமிருந்து ஜெட் விமானங்கள் வாங்குவதை நிறுத்துமாறு சீனா தனது விமான நிறுவனங்களுக்கு தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சீனப்பொருட்களுக்கான வரியை அமெரிக்கா 145 சதவீதமாக உயர்த்திய நிலையில் அதற்கு சீனா, அமெரிக்க பொருட்களுக்கான வரியை 125 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், போயிங் நிறுவனத்திடமிருந்து ஜெட் விமானங்கள் வாங்குவதை நிறுத்துமாறு சீனா தனது விமான நிறுவனங்களுக்கு தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து விமான உதிரி பாகங்கள் வாங்குவதையும் நிறுத்துமாறு சீனா தனது விமான நிறுவனங்களுக்கு கூறியுள்ளதாக வணிகச் செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, அமெரிக்காவுக்கு கனிமங்கள், முக்கிய உலோகங்கள், காந்தம் போன்ற பொருட்களின் ஏற்றுமதியையும் சீனா நிறுத்தியுள்ளது. இதனால் அமெரிக்காவின் ஆயுதங்கள், மின்னணுவியல், வாகன உற்பத்தியாளர்கள், எரோஸ்பேஸ் உற்பத்தியாளர்கள், செமிகண்டக்டர் நிறுவனங்கள், பிற நுகர்வோர் பயன்பாட்டுக்கான பொருட்களை தயாரிக்க தேவையான மூலக்கூறுகள் முற்றிலும் தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, கார்கள் முதல் ஏவுகணைகள் வரை தயாரிக்க தேவையான காந்தங்கள் மற்றும் மூலக்கூறுகளின் ஏற்றுமதி சீன துறைமுகங்களில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.