வவுனியா அமைதியின்மையில் 5 பொலிஸார் காயம்!

வவுனியா, கூமாங்குளத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்ததைத் தொடர்ந்து இடம்பெற்ற அமைதியின்மையில் 5 பொலிஸார் காயமடைந்துள்ளதுடன், பொலிஸாரின் 3 வாகனங்களும் சேதமடைந்துள்ளன என்று வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா, கூமாங்குளம் பகுதியில் மதுபானசாலைக்கு அருகில் நேற்று இரவு வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் வீதியோரமாக வீழ்ந்து இறந்துள்ளார். அவரை வீதியில் நின்ற பொலிஸார் விரட்டிச் சென்றமையால் மேற்படி நபர் வீழ்ந்து  இறந்துள்ளார் என்று பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் இராமசாமி அந்தோனிப்பிள்ளை (வயது 58) என்பவரே மரணமடைந்தவராவார்.

இதன்போது, மதுபானசாலையில் இருந்து வெளியில் வந்த பலர் வீதியில் இறந்து கிடந்தவருக்கு அருகில் சென்ற போக்குவரத்துப் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன்போது 4 போக்குவரத்துப்  பொலிஸார் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்களும் தாக்குதலுக்குள்ளாகி கடுமையாகச் சேதமடைந்துள்ளன.

காயமடைந்த பொலிஸார் வழங்கிய தகவலையடுத்து அங்கு கப் ரக வாகனத்தில் வந்த பொலிஸார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதில் கப் ரக வாகனம் சேதமடைந்துள்ளதுடன் அதன் சாரதியான பொலிஸாரும் காயமடைந்துள்ளார். இதன்போது பொலிஸார் வானத்தை நோக்கித்  துப்பாக்கி வேட்டுக்களை நடத்தி நிலைமையைக் கட்டுப்படுத்தினர்.

அத்துடன், வன்னிப் பிரதிப் பொலிஸ்மா அதிபர், வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உட்பட சம்பவ இடத்துக்கு மேலதிக பொலிசார் வரைவழைக்கப்பட்டதுடன், விசேட அதிரடிப் படையினரும் வரவழைக்கப்பட்டனர்.

பொலிஸாருக்கும் அங்கு குழுமியவருக்கும் இடையில் கடும் முரண்பாடு ஏற்பட்ட நிலையில் அங்கு வந்த நாடாமன்ற உறுப்பினர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் வீதியில் வீழ்ந்து கிடந்தவர் இறந்தமையை உறுதி செய்தார்.

சம்பவ இடத்துக்கு வருகை தந்த திடீர் மரண விசாரணை அதிகாரி சடலத்தைப் பார்வையிட்டதுடன், அதனைப் பொலிஸாரின் வாகனத்தில் ஏற்றி வைத்தியாலைக்கு அனுப்பி வைத்தார்.

இதனையடுத்து அங்கு குழுமியிருந்தவர்கள் பொலிஸாரின் வாகனத்தில் சடலம் கொண்டு செல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து குழப்பம் விளைவித்தனர்.

இதேவேளை, வவுனியா – கூமாங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் வீழ்ந்து கிடப்பதாக நேற்று இரவு போக்குவரத்துப்  பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் நால்வருக்கு நபர் ஒருவரால் தகவல் வழங்கப்பட்டது எனவும், அதன்படி நான்கு பொலிஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்குச் சென்ற போது, அருகில் இருந்த ஒரு குழு அவர்களைத் தாக்கியது எனவும் வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பஸ்தரைப் பொலிஸார் விரட்டிச் சென்றபோது இடம்பெற்ற சம்பவம் காரணமாகவே அந்த நபர் கீழே வீழ்ந்து இறந்து விட்டார் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய குழு தெரிவித்துள்ளது. அருகிலுள்ள மதுபானக் கடையில் மது அருந்திக் கொண்டிருந்தவர்களைப் பொலிஸ் அதிகாரிகள் கைது செய்தனர் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், உயிரிழந்த நபர், ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளின் சக்கரத்தில் பொலிஸார் ஒரு கட்டையை வீசியதன் காரணமாக, அவர் வீழ்ந்து இறந்தார் என்று கிராம மக்கள் கூறியுள்ளனர்.

இருப்பினும், அவ்வாறு நடந்திருந்தால், சக்கரம் சேதமடைந்திருக்கும் எனவும், ஆனால் விபத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிளின் சக்கரத்துக்கு எந்தச் சேதமும் ஏற்படவில்லை எனவும் வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பின்னர் நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸ் கலகத் தடுப்புப் பிரிவினரும், பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் வரவழைக்கப்பட்டனர்.

பிரதேச மக்களால் தாக்கப்பட்ட 5 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மதவாச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு இன்று காலை தடவியல் பொலிஸார் வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன் நீதிபதியும் சம்பவ இடத்தை ப் பார்வையிட்டு விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் சிறப்பு குழுக்களை நியமித்து பல்வேறு கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related Articles

Latest Articles