கதிர்காமம் மலைப்பகுதி ரஜமகா விகாரை தலைமைப்பிக்குவை கொலை செய்து அவரின் உடமைகளை கொள்ளையிட முயற்சித்த ஜந்து இளம் பிக்குகள் உள்ளிட்ட ஏழுபேரை கதிர்காமம் பொலிசார் இன்று கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பிக்குகள் ஐந்துபேரும் அனுராதபுரத்தின் விகாரையொன்றைச் சேர்ந்தவர்களென்று ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது குறித்து கதிர்காமம் மலைப்பகுதி ரஜமகா விகாரை தலைமைப்பிக்கு ஹல்லே ஞானத்திர தேரரிடம் பொலிசார் வினவிய போது தன்னைக் கொலை செய்து தனது உடைமைகளை கொள்ளையிடவே முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக அறிகின்றேன் என்று மட்டும் கூறினார்.
கதிர்காமம் மலைப்பகுதி ரஜமகா விகாரை தலைமைப்பிக்குவின் அறையை உடைத்து உட்புக முயற்சித்த போதே பாதுகாப்புக் கடமைகளில் இருந்த பொலிசாரும் இராணுவத்தினரும் மேற்படி ஐந்து இளம் பிக்குகள் உள்ளிட்ட ஏழு பேரையும் கைதுசெய்தனர்.
அத்துடன் இவர்களிடமிருந்த ஆயுதங்களையும் பொலிசார் மீட்டனர்.இது தொடர்பாக கதிர்காமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உபுல் லியனகே தலைமையிலான குழுவினர் தீவிர புலன் விசாரனைகளை மேற்கொண்டுள்ளனர்.
எம். செல்வராஜா, பதுளை
