இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்கள் கடல் கடந்த இந்தியக் குடியுரிமையை பெற்றுக் கொள்வதற்கான நடைமுறையை இலகுபடுத்தியுள்ள இந்திய அரசாங்கத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்
இந்திய அரசாங்கம் மலையக மக்களின் மேம்பாட்டுக்காகவும், பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்காகவும் பல்வேறு திட்டங்களை அமுல்படுத்தி வருகின்றது.
அவர்களின் மருத்துவ வசதிக்காக கோடிக் கணக்கான ரூபா செலவில் டிக்கோயாவில் வைத்தியசாலை அமைக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, தோட்ட மக்களின் குடியிருப்பு வசதிகளைக் கருத்திற் கொண்டு பாரிய வீடமைப்புத் திட்டமும் இடம்பெற்று வருகின்றது.
எனினும், கடல் கடந்த இந்தியர்களுக்கான குடியுரிமை அண்மைக் காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை பெரும் குறையாகக் காணப்பட்டது. அதை நிவர்த்தி செய்து ஓ.சி.ஐ வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளோம்.
இதைக் கவனத்திற்கொண்டு அதனை இலகுவாகப் பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் ஆவணங்களை இலகுபடுத்தி நடைமுறைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை இலங்கைக்கு விஜயம் செய்திருந்த துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஸ்ணன் நேரடியாக அறிவித்தமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
இதன் மூலம் மலையக மக்கள் பல்வேறு வழிகளில் பயன்பெற வழி பிறந்துள்ளதோடு மாணவர்களின் கல்விக்கு பேருதவியாக அமையும் என்று எதிர்பார்க்கின்றோம். இதற்கு அங்கீகாரம் கொடுத்த இந்தியப் பிரதமர் மோடிக்கும் அரசாங்கத்துக்கும் மலையக மக்கள் சார்பில் மனமார்ந்த நன்றியை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துக் கொள்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
தலவாக்கலை பி.கேதீஸ்










