மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் நேற்றிரவு (28) இடம்பெற்ற விபத்தில் இம்முறை சாதாரண பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவர் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் ஒரு மாணவர் காயம் அடைந்துள்ளார்.
பெரியகல்லாறு மயான வீதியில் குறித்த இரு மாணவர்களும் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற நிலையில் வேகத்தினை கட்டுப்படுத்த முடியாது மின்சார தூணில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
பெரியகல்லாறு இரண்டாம் வட்டாரத்தைச் சேர்ந்த சந்திரகாந்தன் சதுஸன் என்ற 16 வயது மாணவரே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். படுகாயம் அடைந்த மாணவர் பெரியகல்லாறு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.










