வெப்பமான காலநிலை குறித்து விழிப்பாகவே இருப்போம்….!

இந்நாட்களில் கடும் வெப்பம் நிலவுகின்றது. இவ்வாறு உஷ்ணமான காலநிலைக்கு மத்தியில் அன்றாட வாழ்க்கையை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்து ஆலோசனைகளை வழங்கும் வைத்தியர்கள், சுத்தமான குடிநீரை அதிகம் பருகுமாறு கூறுகின்றனர். உடலில் உள்ள உஷ்ணம் வெளியேறமுடியாத வகையிலான ஆடைகளை அணிய வேண்டாம் எனவும் ஆலோசனை வழங்கியுள்ளனர்.அதேபோல வைத்திய ஆலோசனைகளைக் கருத்திற்கொண்டு பாடசாலைகளில் எவ்வாறு விளையாட்டுப்போட்டிகளை நடத்த வேண்டும் என கல்வி அமைச்சு வழிகாட்டல் அறிக்கையையும் வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இதை கருத்திற்கொள்ளாமல் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டுவருகின்றன. கடுமையான வெப்ப காலநிலையைக் கருத்திற்கொள்ளாமல் பாடசாலைகளில் விளையாட்டுப்போட்டிகளை நடத்தினால் என்ன நடக்கும்?

விதுர்சனின் கதை

16 வயதான ஜெயகுமார் விதுர்சனுக்கு, மரதன் ஓட்டப்போட்டியென்பது சவாலான விடயம் கிடையாது. சிறுவயது முதலே அவர் மரதன் போட்டிகளில் பங்கேற்றுவந்துள்ளார். மரதன் ஓடி வெற்றியும் பெற்றுள்ளார். திருக்கோவில் மெதடிஸ்த மிஷன் தமிழ் மகா வித்தியாலயத்திலேயே கல்வி பயின்றுள்ளார். திருக்கோவில் என்பது கிழக்கு மாகாணத்தில், அம்பாறை மாவட்டத்தில் பொத்துவிலில் இருந்து சுமார் 35 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள ஒரு கஷ்ட பிரதேசமாகும்.

ஜெயகுமார் விதுர்சன் மார்ச் 11 ஆம் திகதி காலை வீட்டில் எதுவும் சாப்பிடாத நிலையிலேயே போட்டிக்கு வந்துள்ளார். சுமார் 8 கி.மீ. தூரம் ஓடியுள்ளார். காலை 6.45 மணயிளவிலேயே போட்டி ஆரம்பமாகியுள்ளது. திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரத்துக்கு அருகாமையில் ஆரம்பமான போட்டி, பிள்ளையார் கோவில்வரை சென்று மறுபடியும் மணிகூட்டு கோபுரத்துக்கு அருகில்வர வேண்டும். போட்டி தூரம் 8 கி.மீ. தற்போது கடும் வெப்பம் நிலவுகின்றது. பாடசாலை மாணவர்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என கல்வி அமைச்சு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. கடும் வெப்பமான சூழலில் மாணவர்களை போட்டியில் பங்கேற்க வைப்பதாக இருந்தால் என்ன செய்ய வேண்டும் என கல்வி அமைச்சு 2023 இல் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

போட்டி தூரத்தை அடைவதற்கு சற்று நேரத்துக்கு முன்னர் தனக்கு உடல் வலிப்பதாகவும், வைத்தியசாலைக்கு செல்ல வேண்டும் எனவும் விதுர்சன் கூறியுள்ளார். அதன்பின்னர் அவர் திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போது தனது பெயரைக்கூறக்கூடிய அளவுக்கு இருந்த அவர், அதன்பின்னர் சோர்வடைந்தார்.

ஆம்பியூலன்ஸ் வண்டி தாமதம்

திருக்கோவில் ஆரம்பவைத்தியசாலையென்பது வசதிகளற்ற, மாகாண சபையாலும் கவனத்திக்கொள்ளப்படாத வைத்தியசாலையாகும். இச்சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை ஊழியர் ஒருவரை தொடர்புகொண்டபோது,

“ வைத்தியசாலையில் உள்ள ஆம்பியூலன்ஸ் வண்டி சரியில்லை, நோயாளி பயணித்தால் தொடர்ச்சியாக ஒக்சீசன் வழங்கக்கூடிய நிலையில் அது இல்லை. இதனால் அக்கரப்பத்தனையில் இருந்து ஆம்பியூலன்ஸை வரவழைத்துதான் அவரை அனுப்பினோம். ஆம்பியூலன்ஸ் வருவதற்கு இரண்டு மணிநேரம்வரை சென்றது.” – என்று கூறினார்.

ஆம்பியூலன்ஸ் வருவதற்கு எடுத்துக்கொண்ட இரண்டு மணித்தியாலங்கள் விதுஷனின் வாழ்க்கையின் தலைவிதியை தீர்மானித்த இரண்டு மணித்தியாலங்களாக இருக்கலாம்.
காலை உணவை உட்கொள்ளாமல்
பாடசாலைக்கு வந்த விதுர்சன், அக்கரைப்பற்று வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. எனவே, ‘இந்த தாமதம்”தான் இந்த மரணத்திற்கு முக்கிய காரணம் எனலாம்.

மரண பரிசோதனை அம்பாறை பொது வைத்தியசாலையின் சட்டவைத்திய நிபுணர் சி.டி. மஹாநாமவால் முன்னெடுக்கப்பட்டது. மார்ச் 12 ஆம் திகதி இது தொடர்பில் அறிவித்தலை விடுத்தார். உயிரிழந்த மாணவனின் உடற்பாகங்கள், அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி, அவரின் தீர்மானத்தின் பிரகாரம் மரணத்துக்கான காரணம் வெளியிடப்படும். தீர்ப்பு எவ்வாறு அமைந்தாலும் அதிக தாகம் காரணமாக, விதுர்சனின் உடலில் நீர்ச்சந்து குறைவடைந்து இந்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

பெரிய பாடசாலைகளில் மரதன் ஓட்டபோட்டி நடைபெறும்போது பின்னால் ஆம்பியூலன்ஸ் வண்டி பற்றி சிந்தியுங்கள். 1990 சுவசெரிய பற்றி யோசியுங்கள். இவை எதுவும் இருக்கவில்லையா? போட்டியில் பங்குபற்றிய மாணவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உரிய வகையிலேயே போட்டி நடத்தப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

குதிரை ஓடிய பிறகு…..

தற்போது இது பற்றி என்ன கதைத்தாலும் இறந்த விதுர்சன் மீள வரப்போவதில்லை…சுகாதார அதிகாரிகள்போல் கல்வி அதிகாரிகளும் இந்த மரணத்துக்கு பொறுப்புக்கூற வேண்டும். பொறுப்பை யார் ஏற்பது? விதுர்சன் உயிரிழந்துவிட்டார் என்பதை அறிந்த பின்னர் திருக்கோவில் வைத்தியசாலைக்கு முன்னால் மக்கள் திரண்டனர். இம்மரணத்துக்கு திருக்கோவில் வைத்தியசாலை பொறுப்புக்கூற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
விதுர்சனுக்காக வைத்தியசாலை முன்பாக திரண்ட மக்களை கட்டுப்படுத்துவதற்காக விசேட அதிரடிப்படையினரை களமிறக்க வேண்டிய நிலை அதிகாரிகளுக்கு ஏற்பட்டது. வைத்தியசாலைக்கு முன்பாக வன்முறையில் ஈடுபட்டு, வைத்தியசாலைமீது கல்வீச்சு தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்வதற்கான விசாரணை ஆரம்பமாகியுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு விதுர்சனின் மரணத்துக்கு பொறுப்புக் கூறவேண்டியவர்களையும் தேடிஅறிய வேண்டியது பொலிஸாரின் பொறுப்பாகும். அது நடக்கும்வரை எமது பார்வை தொடரும்.

இந்நிலையில் விதுர்சன் உயிரிழந்து மறுநாள் அதாவது மார்ச் 12 ஆம் திகதி கல்வி அமைச்சின் செயலாளர், அனைத்து பாடசாலைகளுக்கும் கடிதமொன்றை அனுப்பினார். கடும் உஷ்ணமான காலநிலையில் பாடசாலை எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை நினைவூட்டி இருந்தார்.

குதிரை ஓடிய பின்னர் கடிவாளத்தை பூட்டி பயன் இல்லை என்பதே எமது கருத்தாகும்.

Related Articles

Latest Articles