வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி அவர்களை நிர்க்கதியாக்கும் ஏமாற்று வெளிநாட்டு முகவர்கள், இடைத்தரகர்கள் குறித்து மலையகப் பகுதிகளில் பரவலாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறு ஏமாற்றப்படும் பெண்களிடம் பெருந் தொகைப் பணத்தையும் கடவுச்சீட்டுகளையும் பெற்றுக்கொண்டு அந்நபர்கள் தலைமறைவாகிவிடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நீண்டகாலமாக இடம்பெற்றுவரும் இம்மோசடிச் செயற்பாடு அடிக்கடி செய்யப் பட்ட முறைப்பாடுகளையடுத்து அம்பலத்துக்கு வந்துள்ளது.
இவ்வாறு ஏமாற்றத்துக்குள்ளாகும் இப்பிரதேச பெண்கள் தாம் ஏமாற்றப்பட்ட பின் இவ்விடயமாகப் பொலிஸ் நிலையம் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு அறிவித்ததையடுத்து இத்தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்படி மோசடி பேர்வழிகளால் இவ்வாறு மலையக பெண்கள் பலர் ஏமாற்றப்பட்டு வருவதால் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மூலம் தமது நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும் அப்பாவிப் பெண்கள் இவ்வாறான மோசடிக் கயவர்களிடம் சிக்கித் தவிப்பதாக இப்பிரதேச சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
