இங்கிலாந்தில் நேற்று ஒரே நாளில் 53 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளது. புள்ளிவிவரங்கள் படி கடந்த 24 மணி நேரத்தில் 53 ஆயிரத்து 135 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இங்கிலாந்தில் 71 ஆயிரத்து 567 பேர் உயிரிழந்துள்ளனர்.
தலைநகர் லண்டனில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவு மொத்தமாக முடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் எஞ்சிய நோயாளிகளை யார்க்சயர் பகுதி மருத்துவமனைகளுக்கு மாற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்தில் பரவி வரும் புதிய வீரியமிக்க கொரோனா பாதிப்பு நாடு தழுவிய மூன்றாவது ஊரடங்கிற்கு காரணமாக அமையும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
மேலும், லண்டன் மருத்துவமனைகளில் இடம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், மருத்துவமனைகளுக்கு வெளியே கூடாரங்கள் அமைத்து நோயாளிகளை பராமரிக்க வேண்டிய மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பொதுவாக போர் காலகட்டத்தில் இதுபோன்ற கூடாரங்கள் அமைத்தே நோயாளிகளை பரமாரிக்கும் நிலை உருவாகும். தற்போது லண்டனிலும் அதே நிலை உருவாகியுள்ளதாக மருத்துவர்கள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே, சில லண்டன் மருத்துவமனைகளின் நிர்வாகிகள் தரப்பு பல பிரதான யார்க்சயர் மருத்துவமனைகளிடம் கொரோனா நோயாளிகளைப் பெறுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். லண்டன் மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சை பிரிவுகள் தற்போது 114 சதவீத திறனில் செயல்படுவதாக தெரிய வந்துள்ளது.