குற்றப் புலனாய்வு திணைக்களத்திலிருந்து நிழல் உலக தாதாக்களான ‘ஹரக்கட்டா’ மற்றும் ‘குடு சலிது’ ஆகியோரை மீட்பதற்கான திட்டத்துக்கு “Do or Die” (டூ வோ டய்- ) என குறித்த பெயர் சூட்டப்பட்டிருந்தது என தெரியவந்துள்ளது.
100 கோடி ரூபா ஒப்பந்தமொன்றின் அடிப்படையிலேயே இதற்கான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ‘ஹரக்கட்டா’, ‘குடுசலிது’ ஆகியோரை மீட்பதற்காக குற்ற புலனாய்வு திணைக்களம்மீது ‘கொரில்லா’ தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது என வெளியாகியுள்ள தகவல் இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான தாக்குதல் திட்டத்தை வகுத்த முன்னாள் இராணுவ கொமாண்டோக்கள் இருவர் சிஐடியினரால் கைது செய்யப்பட்டு, அவர்களின் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்படி இரு சந்தேக நபர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள இடத்துக்குள் நுழைந்து ‘இரசாயன’ தாக்குதலை நடத்தி அவர்களை மீட்டுசெல்ல திட்டமிடப்பட்டிருந்தது எனவும், இராணுவ கொமாண்டோ உடையில் சிஐடிக்குள் நுழைந்தே தாக்குதல் நடத்தப்படவிருந்தது எனவும் இவர்கள் கூறியுள்ளனர் தெரியவருகின்றது.
சிஐடி வளாகத்தில் உள்ள பாதுகாப்பு தரப்புகள்மீதும் தாக்குதல் நடத்திவிட்டு, ‘ஹரக்கட்டா’, ‘குடு சலிது’ ஆகிய இருவருக்கும் இராணுவ கொமாண்டோ ஆடை அணிவித்துவிட்டே அவர்களை மீட்டு செல்ல வியூகம் வகுக்கப்பட்டுள்ளது எனவும், இதற்காக கொமாண்டோ பயிற்சி பெற்றவர்களை ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் சிஐடியினர் கொழும்பு கோட்டை நீதிமன்றத்துக்கு கடந்த 24 ஆம் திகதி தெரியப்படுத்தியுள்ளனர். இது தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோட்டை நீதவான் திலிக கமகே, சிஐடியினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் கொமாண்டோக்களிடம் விரிவான விசாரணை நடத்தப்பட்டுவருகின்றது. மேலும் பல தகவல்களும் வெளிவந்துள்ளன.
தாக்குதலின்போது தாம் உயிரிழந்தால் தமது குடும்ப உறுப்பினர்களுக்கு எவ்வாறு உதவ வேண்டும் என்பது உட்பட மேலும் சில இணக்கப்பாடுகளை குற்றச்செயலில் ஈடுபடவிருந்தவர்கள், ஒப்பந்தக்காரர்களுடன் ஏற்படுத்திக்கொண்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.
நவீன தொலைதொடர்பு சாதனம் ஊடாக வெளிநாட்டில் உள்ள குற்றவாளிகளுடனும் கதைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிஐடி திணைக்களத்துக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.










