10 ஆம் திகதி ரூ. 1,700 கிடைப்பது சந்தேகமே…!

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு எதிர்வரும் 10 ஆம் திகதி 1,700 ரூபா சம்பள உயர்வு கிட்டுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1,700 ரூபா வழங்கப்பட வேண்டும் என கடந்த மே மாதம் (21) ஆம் திகதி தொழில் அமைச்சின் செயலாளரால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த சம்பளத்தை தம்மால் தொழிலாளர்களுக்கு வழங்க முடியாதென பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் எதிர்ப்பு காட்டி வந்தது.

அதேநேரத்தில் தொழில் அமைச்சினால் வெளியிடப்பட்டிருந்த 1700 ரூபா சம்பளம் தொடர்பான வர்த்தமானியை சவாலுக்கு உட்படுத்தி இவ் வர்த்தமானிக்கு எதிராக தடை உத்தரவை பிறப்பித்து எழுத்தாணை பிறப்பிக்க வேண்டும் என 21 பெருந்தோட்ட நிறுவனங்கள் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தன.

இருப்பினும் இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த (03) ஆம் திகதி விசாரணைக்கு எடுத்து கொண்ட மேன் முறையீட்டு நீதிமன்றம், தடையுத்தரவு பிறப்பிக்க முடியாது என தீர்ப்பு வழங்கியது.

இது இவ்வாறிருக்க பெருந்தோட்ட தொழிலாளர்கள் நீதிமன்ற தீர்ப்பினை தொடர்ந்து இம்மாதம் 10 ஆம் திகதி குறித்த சம்பள உயர்வு கிட்டும் என தொழிலாளர்கள் எதிர்பார்த்தனர். இருந்த போதிலும் இம்மாத சம்பளத்தின் இறுதி கணக்கு (05) ஆம் திகதி தோட்ட நிர்வாகங்களால் முடிக்கப்பட்டுள்ளது.

எனினும், இம்மாத சம்பளத்தில் தொழிலாளர்களுக்கு உயர்த்தப்பட்ட 1700 ரூபா உள்வாங்கப்படாது, வழமையாக வழங்கப்பட்டு வந்த 1000 ரூபா படியே சம்பள கணக்கு முடிக்கப்பட்டுள்ளது என தோட்ட தொழிற்சங்க தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இது குறித்து தோட்ட தொழிற்சங்க தலைவர்கள் தமது தோட்ட காரியாலயங்களுக்கு சென்று வினவிய போது 1700 ரூபா ; சம்பளம்படி தொழிலாளர்களுக்கு இம்மாத சம்பள கொடுப்பனவை வழங்க தோட்ட நிறுவன தலைமையகத்தில் இருந்து சுற்றுநிறுபம் வந்து கிடைக்கவில்லை என தோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் உயர்த்தப்பட்டுள்ள 1700 ரூபா சம்பளம் இம்மாத சம்பளத்தில் கிடைக்காது போல் உள்ளதாக தோட்ட தொழிற்சங்க தலைவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அதேநேரத்தில் நீதிமன்ற உத்தரவை மதித்து தோட்ட நிறுவனங்கள் கடந்த மாதம் (21) ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தல் படி 1700 ரூபா சம்பளத்தை இம்மாதம் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

எனவே இந்த விடயத்தில் தொழில் அமைச்சு மற்றும் தொழிற்சங்கங்கள் தலையிட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ஆ.ரமேஸ்-

Related Articles

Latest Articles