10 நாட்களுக்கு நாட்டை முடக்கி 10 திட்டங்களை செயற்படுத்துக!

” கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்கு விஞ்ஞானப்பூர்வமான முடக்கவே அவசியம். இது தொடர்பில் வெள்ளிக்கிழமைக்குள் அரசு அறிவிப்பொன்றை விடுக்கவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் திங்கட்கிழமை முதல் நாட்டை பலவந்தமாக முடக்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.” – என்று இலங்கை அரச மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் வலியுறுத்தினார்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையும், மரண விகிதமும் சடுதியாக அதிகரித்துவரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கு குறைந்தபட்சம் நாட்டை 10 நாட்களுக்கு விஞ்ஞானப்பூர்வமாக முடக்குமாறு அரச மற்றும் தனியார் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நேற்று முன்தினம் கோரிக்கை விடுத்தது. இதனை வலியுறுத்தி நாட்டில் சில பகுதிகளில் நேற்றைய தினம் தொழிற்சங்க கூட்டமைப்பால் கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

அவ்வாறு நடைபெற்ற போராட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே ரவி குமுதேஷ் இவ்வாறு வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ நாட்டில் தற்போதைய சூழ்நிலையில் பொது முடக்கவே அவசியம். அப்போதுதான் வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும். அரசியல் ரீதியிலான லொக்டவுன் அவசியமில்லை. விஞ்ஞானப்பூர்வமான லொக்டவுனே அவசியமாகின்றது. இவ்வாறு நாட்டை முடக்கிய பின்னர் முன்னெடுக்கப்பட வேண்டிய 10 நடவடிக்கைகள் தொடர்பில் அரசிடம் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதன்படி 10 யோசனைகளை செயற்படுத்தி 10 நாட்களுக்கு நாட்டை முடக்குமாறு கோருகின்றோம்.

நாளாந்தம் சுமார் ஒரு லட்சம் கொவிட் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதன்மூலம் வைரஸ் பரவலின் வேகத்தை கண்டறிய முடியும் என்பதுடன் அவசியமானவர்களை வைத்தியசாலைகளில் அனுமதிக்கவும் முடியும். அதேபோல கட்டில்கள் தயாரிக்கப்பட வேண்டும். இடைத்தங்கல் சிகிச்சை நிலையம் அவசியம் என்பன உட்பட மேலும் சில யோசனைகள் அதில் உள்ளடங்கியுள்ளன.

10 நாட்களுக்கு நாட்டை மூடும் முடிவை வெள்ளிக்கிழமைக்கும் அரசு எடுக்காவிட்டால் திங்கட்கிழமை முதல் அதற்கான நடவடிக்கையை தொழிற்சங்கம் என்ற அடிப்படையில் நாம் மேற்கொள்வோம். “ – என்றார்.

Related Articles

Latest Articles