” அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின்கீழ் மூன்று பெருந்தோட்ட நிறுவனங்கள் இருக்கின்றன. எனவே, குறித்த பெருந்தோட்டங்களின்கீழ் வேலைசெய்யும் தொழிலாளர்களுக்கு நாளை வேண்டுமானாலும் ஆயிரம் ரூபாவை வழங்கலாம். அதற்கான நிதி ஒதுக்கீடு அரசாங்கத்திடம் இருக்கின்றதா?” – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (19) நடைபெற்ற வரவு – செலவுத்திட்டம்மீதான விவாதத்தில் உரையாற்றிய ஆளுங்கட்சி எம்.பியான சாமர சம்பத் தசநாயக்க,
” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்கும் யோசனை வரவு – செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை வேலுகுமார், இராதாகிருஷ்ணன்போன்றவர்கள் விமர்சிக்கின்றனர். நல்லாட்சியின்போது அவர்களால் ஏன் பெற்றுக்கொடுக்கமுடியாமல்போனது? முதலாளிமார் சம்மேளனத்தின் இணக்கம் தேவையில்லை. நாம் சம்பள உயர்வை வழங்குவோம்.” – என்று குறிப்பிட்டார்.
இதன்போது குறுக்கீடு செய்த வேலுகுமார் எம்.பி.,
” நாட்டில் 25 பெருந்தோட்ட நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம், மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை, எல்கடுப பிளான்டேசன் ஆகிய மூன்று நிறுவனங்களும் அரசின் உடையது. எனவே, அந்நிறுவனங்களில்கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு நாளை வேண்டுமானாலும் சம்பளத்தை வழங்கலாம். ஆனால் அதற்கான நிதி ஒதுக்கீடு எங்கே” – என்று வினா எழுப்பினார்.
அடுத்த மாதம் வழங்குவதா அல்லது எப்போது வழங்குவது என்பதை நாங்கள் பார்த்துக்கொள்கின்றோம் என பதிலளித்தார் சாமர சம்பத் தசநாயக்க.
அதேவேளை, முற்போக்கு கூட்டணி எம்.பிக்கள்மீது அவர் கடும் விமர்சனங்களையும் முன்வைத்தார்.