” தோட்டத் தொழிலாளர்களை திட்டமிட்ட அடிப்படையில் இந்த அரசாங்கம் ஏமாற்றியுள்ளது.” – என்று தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற ஒதுக்கீட்டு சட்டமூலம்மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மார்ச் முதலாம் திகதி முதல் நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் என்ற உத்தரவாதத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ச பாராளுமன்றத்தில் வைத்து வழங்கினார். இன்று நவம்பர் மாதமும் நிறைவடையப்போகின்றது. ஆனால் தோட்டத் தொழிலாளர்களுக்கு அந்த கொடுப்பனவு வழங்கப்படவில்லை. அதற்கான நிதியும் ஒதுக்கப்படவில்லை.
திட்டமிட்ட அடிப்படையில் தோட்டத் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். பிரதமர்தான் உறுதிமொழி வழங்கினார். ஆனால் அவரால் சமர்ப்பிக்கப்பட்ட ஒதுக்கீட்டு சட்டமூலத்தில் தொழிலாளர்களுக்காக ஒன்றும் இல்லை. வாக்குகளைப் பெறுவதற்காகவே ஆயிரம் ரூபா கதை கூறப்பட்டு, தேர்தல் முடிந்ததும் ஏமாற்றப்பட்டுள்ளனர்.” – என்றார்.










