மக்கள் நலனுக்காக எப்போதும் முன்னின்று செயற்படுவதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸே சிறந்த உதாரணம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உப செயலாளரும் பிரஜா சக்தி செயற்றிட்டத்தின் பணிப்பாளர் நாயகமுமான பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் வெறும் பேசுபொருளாகவும் சாத்தியப்படுமா என்ற கேள்விக்கு மத்தியிலுமிருந்த பெருந்தோட்ட மக்களின் ஆயிரம் ரூபா வேதன அதிகரிப்பு, மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதி எதிர்ப்பார்ப்புமாக இருந்தது இன்று பெருந்தோட்ட மக்களின் அடிப்படை சம்பளமாக பெற்று கொடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று மட்டுமல்லாது 80 வருட சேவையில் மக்களின் நலனுக்காகவும் மக்களின் உரிமைக்காகவும் முன்னின்று செயற்படும் ஒரு ஸ்தாபனம் என்பதை இன்று நிரூபித்துள்ளது. அனைத்து மக்களும் இதனை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
கடந்த காலங்களில் ஒரு ரூபாவைக்கூட சம்பள அதிகரிப்பாக வழங்க முடியாத வங்குரோத்து அரசியல் தலைவர்கள், இன்று நாங்கள் மக்களுக்கு பெற்றுக் கொடுத்த சம்பள அதிகரிப்பைக் கண்டு மௌனித்திருப்பது புதிதான விடயமல்ல. அவர்களால் விசமர்சிக்கவும் வசைப்பாடுவும் மாத்திரமே முடியுமே தவிர செயலளவில் எதனையும் செய்ய முடியாதது என்பதே சிறந்த சான்றாகும்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இந்த ஆயிரம் ரூபா விடயம் மாத்திரமல்லாது. இந்திய வம்சாவளி மலையக மக்களின் வாழ்வியலில் சுபீட்சத்தை ஏற்படுத்தும் தொலை நோக்கம் கொண்டு செயலை அமுல்படுத்தும் வகையிலேயே செயற்படும் என்பதை பெறுமதித்துடன் கூறிக் கொள்ள முடியும்.
மக்களின் தொழிற்சங்க உரிமைகள், அரசியல் உரிமைகள் என அனைத்தையும் பெற்று கொடுப்பதற்காக முன்னின்று செயற்படுவோடும். விமர்சனம் செய்வோர் செய்யட்டும். நாங்கள் விமர்சனங்களைக் கண்டு அஞ்சுவதில்லை. மக்களுக்கு என்ன அத்தியாவசி தேவைகள் இருக்கின்றதோ அதனை பெற்றுக் கொடுக்க எங்களுடைய அரசியல் பலத்தைக் கொண்டு, அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் முன்னின்று பெற்றுக் கொடுப்போம்.
ஆயிரம் அதிகரிப்பினால் சில சலுகைகள் இல்லாது போயுள்ளதாக பலர் கூறுகின்றனர். ஆனால், அவை அனைத்தும் கூட்டு ஒப்பந்தம் ஊடாகவே பெற்று கொடுக்கப்பட்டது. ஆகவே, அன்று கூட்டு ஒப்பந்தத்தை ஏளனம் செய்தவர்கள் இன்று அதன் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளது மகிழ்ச்சியக்கின்றனது. பலருக்கு பேச்சில் மட்டும் முடிந்ததை நாங்கள் செயல்வடிவில் செய்து காட்டியுள்ளோம். மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாது மக்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை பெற்று கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், உரிமை சார்ந்த சலுகைகளும் பெற்று கொடுக்கப்படும் என்றார்.