2026 இற்குள் 10,000 இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு!

2026 ஆம் ஆண்டில் 10,000 தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்பிற்காக அனுப்புவதற்கான ஏற்பாடுகளை இலங்கை முன்னெடுத்துள்ளதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு துறையில் பணியாற்றுவதற்காகச் செல்லவுள்ள 164 தொழிலாளர்களுக்கு பயண அனுமதிப் பத்திரங்களை வழங்கும்போதே அவர் இக்கூற்றை வெளியிட்டார். மேலும், இந்த வேலைத்திட்டம் முறையான மற்றும் வெளிப்படையான நடைமுறையின் கீழ் முன்னெடுக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாண்டில் இதுவரை 2,500 இலங்கையர்கள் இஸ்ரேலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 6,500 தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்புகள் தயார் நிலையில் உள்ளன.

இவற்றுடன் கூடுதலாக, ஒரு புதிய துறையில் மேலும் 1,000 வாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன், இது ஒட்டுமொத்த இலக்கான 10,000 ஐ அடைவதற்கு உதவும் என்றும் அமைச்சர் கூறினார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் உத்தியோகபூர்வமாகப் பதிவு செய்வதன் மூலம், இலங்கையர்கள் குறைந்த செலவிலும் அதிக நம்பகத்தன்மையுடனும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்று, தங்களின் வெளிநாட்டு வேலைக்கனவை நனவாக்கிக் கொள்ள முடியும் என்றும் அமைச்சர் ஹேரத் வலியுறுத்தினார்.

Related Articles

Latest Articles