கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையம் உட்பட தேசிய வளங்களை பாதுகாப்பது தொடர்பான முக்கியத்துவமிக்க கலந்துரையாடலொன்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடைபெற்றது.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் அரசுக்கு ஆதரவு வழங்கும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர். அத்துடன், துறைமுகம், மின்சாரம் மற்றும் எரிபொருள் சார் துறைகளின் தொழிற்சங்க உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது யுகதனவி மின்உற்பத்தி நிலையத்தை வெளிநாட்டு நிறுவனத்துக்கு வழங்கும் முடிவு பாரதூரமானது என சுட்டிக்காட்டியுள்ள தொழிற்சங்க பிரமுகர்கள், இதனை தடுப்பதற்கு பங்காளிக்கட்சிகள் தலையீடு செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து இவ்விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்து பேச்சு நடத்துவதற்கு பங்காளிக்கட்சிகள் தீர்மானித்துள்ளன. அத்துடன், தேசிய வளங்களை பாதுகாப்பதற்கு முன்நின்று செயற்படுவதாகவும் அறிவித்துள்ளன.
இந்த சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிட்ட அமைச்சர் வாசுதேவ நாணயக்கார,
” தேசிய வளங்கள் என்பது தேசிய பாதுகாப்பின் ஒரு அங்கமாகும். எனவே, அவை விற்பனை செய்யப்படக்கூடாது. இந்த நிலைப்பாட்டிலேயே நாம் உள்ளோம். வேறு நபர்கள் மாறுபட்ட நிலைப்பாட்டில் இருக்கலாம்.” – என்றார்.
அதேவேளை, ” இது அரசுக்கு எதிரான சந்திப்பு அல்ல. நாட்டை கட்டியெழுப்புவது தொடர்பான கலந்துரையாடலாகும்.” – என்று சந்திப்பின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.










