கோலி சோடா (Goli Soda) எனப்படும் குளிர்பானத்தின் சுமார் 12,000 போத்தல்களை, குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு மூச்சுத்திணறல் அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய பாதுகாப்பற்ற மூடிகள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி கொழும்பு மாநகர சபை (CMC) பறிமுதல் செய்துள்ளது.
கொழும்பு மாநகர முதல்வர் இது தொடர்பில் தெரிவிக்கையில், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட சோதனைகளின் போது பாதுகாப்பற்ற பொதியிடல் காரணமாக இந்தப் போத்தல்கள் கைப்பற்றப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
குறித்த போத்தல்களின் மூடியில் உள்ள சிறிய கண்ணாடி கோளங்கள் குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், 109 குற்றச்சாட்டுகளின் கீழ் மூன்று நீதிமன்ற வழக்குகள் தொடரப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் மொத்தமாக 351,000 ரூபா அபராதம் விதித்ததுடன், பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து போத்தல்களையும் அழிக்க உத்தரவிட்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட கொழும்பு மாநகர சபையின் சுகாதாரத் திணைக்களத்துக்கும் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கும் முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார்.
இத்தகைய நடவடிக்கைகளின் வெற்றியை பறிமுதல் செய்யப்பட்ட போத்தல்களின் எண்ணிக்கையாலோ அல்லது விதிக்கப்பட்ட அபராதங்களாலோ மட்டும் மதிப்பிடக் கூடாது என்றும், அவற்றின் மூலம் தடுக்கப்படக்கூடிய விபத்துகளே உண்மையான வெற்றியாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஆபத்தான சம்பவங்கள் நடந்த பிறகு நடவடிக்கை எடுப்பதை விட, அவை நிகழ்வதற்கு முன்பே தடுப்பது அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் கொழும்பு மாநகர முதல்வர் மேலும் தெரிவித்துள்ளார்.










