’13’ இல் கைவைத்தால் மாத்திரமே ஒரே நாடு – ஒரே சட்டம் சாத்தியம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ என்ற கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டுமெனில் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் மாற்றியமைக்கப்படவேண்டும் – என்று ஜனாதிபதி சட்டத்தரணி மனோஹர டி சில்வா தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பொன்றை இயற்றுவதற்கு காலமெடுக்கும் என்று அரசாங்கம் கருதும் பட்சத்தில் இதற்கான ஏற்பாடுகள் ’20’ஆவது திருத்தச்சட்டத்தின்மூலம் மேற்கொள்ளலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி மனோஹர டி சில்வா மேலும் கூறியவை வருமாறு,

” அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம், 16 ஆவது திருத்தச்சட்டம் மற்றும் தேர்தல் முறை ஆகியவற்றிலுள்ள நாட்டுக்கு பொருந்தாத அதேபோல் தீங்குவிளைவிக்ககூடிய விடயங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவே அரசாங்கத்துக்கு நாட்டு மக்கள் ஆணை வழங்கினர்.

ஜனாதிபதியும், பிரதமரும் வெவ்வேறான கட்சிகளை சார்ந்தவர்களாக இருந்தபோதே 19ஆவது திருத்தச்சட்டம் நாட்டை நிர்வகிப்பதற்கு தடையாக இருந்தது.தற்போது அண்ணனும், தம்பியுமே இவ்விரு பதவிகளை வகிக்கின்றனர். எனவே, 19 சிக்கலாக அமையாது. எனினும், அது மறுசீரமைக்கப்படவேண்டும். ஆனால் 19 இற்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தைவிடவும் 13 இற்கு வழங்கப்பட்டிருக்கவேண்டும்.

ஒரே நாடு, ஒரே சட்டம் என்பதே ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் கொள்கையாக இருக்கின்றது.அதனை நடைமுறை சாத்தியமான விடயமாக மாற்றியமைக்கவேண்டும். 13 ஐ மாற்றியமைக்காமல் இது சாத்தியப்படுமா என்ற கேள்வியும் எழுகின்றது.

ஏனெனில் தமது ஆட்சிஅதிகாரத்துக்குட்பட்ட பகுதிக்கு தேவையான சட்டம் இயற்றும் அதிகாரம் மாகாணசபைக்கு இருக்கின்றது, எனவே, ஒரே நாடு – ஒரே சட்டம் என்ற ஜனாதிபதியின் கொள்கையுடன் இது இவ்விடயம் ஒத்துபோகவில்லை.

அடுத்ததாக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் சட்டம், ஒழுங்கு என்பது மாகாணபட்டியலில் உள்ளது. இதன்படி முதலமைச்சரின்கீழ் இயங்கும் பொலிஸொன்றை உருவாக்கலாம். இந்நிலைமையை மாற்றாமல் மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் பொலிஸ் அதிகாரத்தை பெறுவதற்கு முயற்சிக்கப்படலாம்.

விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார், சுமந்திரன் ஆகியோரின் அண்மைக்கால அறிவிப்புகள் இதனையே வெளிப்படுத்தின.

அதேவேளை, புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு காலமெடுக்கும் என அரசாங்கம் கருதுமானால் அதற்கு முன்னர் 20ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக 13 ஐ மாற்றியமைக்கலாம். இதன்படி மாகாணசபைக்கான சட்டம் இயற்றும் அதிகாரம், வடக்கு. கிழக்கு இணைப்பு, ஆயுதம் தாங்கிய பொலிஸ் படையை உருவாக்கும் அதிகாரம் ஆகிய சரத்துகளை நீக்கவேண்டும். ஒரு வசனத்தின் ஊடாக இதனை செய்யலாம்.” – என்றார்.

Related Articles

Latest Articles