இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை அன்று எதிர்த்ததற்காக ஜே.வி.பியினர் இன்று மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவின் இந்திய பயணம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ஜே.வி.பியினர் ஜனநாயக வழியில் பயணிப்பது மகிழ்ச்சியளிக்கின்றது. ஆனால் அவர்கள் கார்த்திகை வீரர்கள் தினத்தை அனுஷ்டிப்பதை அனுமதிக்க முடியாது. அத்துடன், 70 காலப்பகுதியில் உயிரிழந்தவர்களுக்காக அவர்கள் மேயில் நினைவேந்தல் நடத்துகின்றனர். இதையும் ஏற்கமுடியாது.
இன்று ஜே.வி.பியினர் இந்தியா சென்றுள்ளனர், நல்லவிடயம். ஆனால் அன்று இந்தியாவில் இருந்து மருந்து, பருப்பு கொண்டுவந்தவர்களையெல்லாம் ஜே.வி.பியினர் கொலை செய்தனர். இலங்கை, இந்திய ஒப்பந்தத்தை எதிர்த்தனர். மாகாணசபை முறைமைக்கு போர்க்கொடி தூக்கினர். இலங்கை – இந்திய ஒப்பந்தம்தான் இந்தியாவின் அடிப்படை காரணி. ஆக தற்போதைய சந்திப்பில் இது பற்றி பேசப்படாமல் இருக்குமா என்ன?
எனவே, இந்திய எதிர்ப்பு கொள்கை உட்பட தாம் அன்று செய்தது தவறு என்பதை ஏற்று அது தொடர்பில் ஜே.வி.பியினர் தெளிவான அறிவிப்பொன்றை வெளியிடவேண்டும். தன்னால் வெள்ளை இனத்தவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்காக உண்மையை கண்டறியும் ஆணைக்குழு முன்னிலையில் நெல்சன் மண்டேலா மன்னிப்பு கோரினார். அதுபோல ஜே.வி.பியினரும் மன்னிப்பு கோர வேண்டும்.” – என்றார்.