சட்டத்தரணியொருவரும், அவரது மனைவியும் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தின் பின்னணியில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அவசர விசேட கூட்டத்தை கூட்டியுள்ளது.
இந்த விசேட கூட்டம் நாளை (15) மாலை 3 மணிக்கு கொழும்பில் நடைபெறவுள்ளது.
சங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து உறுப்பினர்களும் தவறாது பங்கேற்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
2012ஆம் ஆண்டுக்குப் பிறகு இவ்வாறான விசேட கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் சட்டத்துறை பாதுகாப்பு மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காகவே இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், சமீபத்திய துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளதுடன், பொதுமக்கள் மற்றும் சட்டத்துறையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
இந்த அவசரக் கூட்டம் நாட்டின் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து முக்கிய தீர்மானங்களுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.










