பொதுத்தேர்தலில் 68 லட்சத்து 53 ஆயிரத்து 690 வாக்குகளைப்பெற்று 128 ஆசனங்களைக் கைப்பற்றி ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி வெற்றிவாகை சூடியுள்ளது. அக்கட்சிக்கு 17 தேசிய பட்டியல் ஆசனங்களும் பகிரப்பட்டுள்ளன. இதன்படி மொத்தமாக 145 ஆசனங்களை மொட்டு கட்சி பெற்றுள்ளது.
சஜித் பிரேதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியானது 27 லட்சத்து 71 ஆயிரத்து 980 வாக்குகளைப்பெற்று 47 ஆசனங்களைக் கைப்பற்றியது. 7 தேசியப்பட்டியல் ஆசனங்களும் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி அக்கட்சிக்கு மொத்தமாக 54 ஆசனங்கள் கிடைத்துள்ளது.
3 லட்சத்து 27 ஆயிரத்து 168 வாக்குகளைப்பெற்ற இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி, ஒரு தேசியப்பட்டியல் உட்பட 10 ஆசனங்களை வென்றுள்ளது. தேசிய மக்கள் சக்திக்கு தேசியப்பட்டியல் உள்ளடங்களாக 3 ஆசனங்கள் கிடைத்துள்ளன.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஒரு ஆசனத்தை வென்றி நிலையில் தேசியப்பட்டியலும் வழங்கப்பட்டுள்ளது. ஈ.பி.டி.பி. 0.53 வாக்குவீதத்துடன் 2 ஆசனங்களை வென்றுள்ளது.
அத்துடன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், முஸ்லிம் தேசிய கூட்டணி, தேசிய காங்கிரஸ் மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகியன தலா ஒரு ஆசனம்வீதம் பெற்றுள்ளன.