15 வருடங்களுக்கு மேலாக புனரமைக்கப்படாத பிலேக்வோட்டர் தோட்டப்பாதை

அம்பகமுவ பிரதேச சபைக்கு சொந்தமான கினிகத்தேனை பகதுலவ பிலேக்வோட்டர் தோட்டத்திற்கு செல்லும் பாதை கடந்த 15 வருடங்களுக்கு மேலாக குண்டும் குழியுமாக காணப்படுவதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

வீதியின் சீரற்ற தன்மை காரணமாக பாரிய கற்கள் தோன்றி நடந்து கூட செல்ல முடியாத நிலை காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

கினிகத்தேனை நாவலபிட்டி பிரதான பாதை இணைக்கும் பிலேக்வோட்டர் தோட்டத்திற்கு செல்லும் சுமார் இரண்டரை கிலோமீற்றர் தூரம் கொண்டதாக இந்த பாதை காணப்படுகின்றது.

இத்தோட்டத்தில் வாழும் சுமார் 500 மேற்பட்ட குடும்பங்கள் இந்த வீதியினையே பயன்படுத்துகின்றனர்.

இந்த வீதியினூடாகவே பிளெக்வோட்டர் தமிழ் வித்தியாலயம், மத்திய மாகாண நெசவுக் கைத்தொழில் நிலையம், அலங்கார மீன் உற்பத்தி நிலையம்,பிலேக்வோட்டர் மேல் கீழ் பிரிவு போன்றன காணப்படுகின்றன. நாளாந்தம் சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள்,தொழில்புரியும் ஊழியர்கள் ஆகிய அனைவரும் இவ்வீதியினையே பயன்படுத்தி வருகின்றனர். எனினும் இந்த வீதி உடைந்த நிலையில் மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதனால் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ்வீதியை பயன்படுத்தும் முச்சக்கரவண்டி சாரதிகள் நாளாந்த அசௌகரியங்களுக்கு மத்தியிலேயே பயணிக்கின்றனர். இதனால் தங்களுடைய வாகனங்கள் அடிக்கடி பழுதடைவதாகவும் இதனால் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆட்டோ சாரதிகள் முகம் கொடுப்பதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.

வீதி சீரின்மை காரணமாக கூலி வாகனங்கள் அதிக பணம் அறிவிடுவதாகவும் இதனால் சாதாரண மக்கள் பொருட்களை கொண்டு செல்வதற்கும் பயணிப்பதற்கும் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கின்றனர்.

சிறிது மழை பெய்தாலும் வீதியிலுள்ள குழிகளில் தண்ணீர் நிறைந்து வழிவதாகவும் பிலேக்வோட்டர் பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் பாடசாலைக்கு செல்லும் போது பாதணிகளை கழற்றிக்கொண்டு பாடசாலை சென்றே மீண்டும் அணிந்து கொள்வதாகவும் தெரிவிக்கின்றனர்.

அதிக மழையின் போது வீதி நீரில் மூழ்குவதனால் அடிக்கடி பாடசாலைக்கு விடுமுறை வழங்கி பிறிதொரு நாளில் கற்றல் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டி ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இவ்வீதியில் அவசரத்திற்கு ஒரு நோயாளியை​ கூட கொண்டு போக முடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

Related Articles

Latest Articles