இலங்கையில் கடந்த 23ஆம் திகதி முதல் நேற்றுவரையான 15 நாட்களுக்குள் 6 ஆயிரத்து 683 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. அத்துடன், 17 பேர் பலியாகியுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப்பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் ஒரே நாளில் அதிகளவான தொற்றாளர்கள் (866) கடந்த 23 ஆம் திகதி அடையாளம் காணப்பட்டனர். ஒரே நாளில் அதிகளவானவர்கள் (765) நேற்று முன்தினம் (5) குணமடைந்தனர்.
இலங்கையில் 2ஆவது அலைமூலம் நேற்றுவரை 9, 496 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.
இதன்படி மினுவாங்கொட கொத்தணிமூலம் ஆயிரத்து 41 பேருக்கும், பேலியகொடை கொத்தணிமூலம் ஆயிரத்து 7 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது. ஏனைய 7 ஆயிரத்து 448 பேரும் இவர்களுடன் தொடர்பை பேணியவர்களாவர். மினுவாங்கொட கொத்தணிமூலம் வைரஸ் தொற்றியவர்களில் இதுவரை 3ஆயிரத்து 350 பேர் குணமடைந்துள்ளனர்.
அதேவேளை, கொரோனாவால் இலங்கையில் நேற்று 30 ஆவது மரணம் பதிவானது.
கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த கொழும்பு 15, முகத்துவாரம் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
நீரிழிவு நோயுடன் கொவிட் 19 தொற்று ஏற்பட்டமை காரணமாக அவர் உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.