1,540 கிராம உத்தியோகத்தர்களுக்கு நியமனங்கள்

 

கிராம உத்தியோகத்தர் சேவையின் III ஆம் தரத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட 1,540 அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில், இன்று (08) முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது.

கிராம உத்தியோகத்தர் சேவைக்கு புதிய பிரமாணக் குறிப்பு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, கிராம உத்தியோகத்தர் சேவை தரம் III இற்காகத் தெரிவுசெய்யப்பட்ட 1,540 அதிகாரிகளுக்கு முதன்முறையாக இவ்வாறு நியமனங்கள் வழங்கப்பட்டன.

பரீட்சைப் பெறுபேறுகள் மற்றும் நேர்முகத்தேர்வுகளின் திறமைகளை மாத்திரம் கருத்திற்கொண்டு தகுதியானவர்களை அரச சேவைக்கு உள்ளீர்க்கும் கொள்கைக்கு இணங்க, இந்த நியமனங்கள் வழங்கப்பட்டிருப்பது இதன் சிறப்பம்சமாகும்.

நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் இருந்த பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், கிராம உத்தியோகத்தர் பதவிக்கென அவர்களுக்கே உரித்தான தனித்துவமான சேவையின் கீழ்,
அவர்களுக்கெனத் தனித்துவமான சம்பளக் கட்டமைப்போடு கிராம உத்தியோகத்தர் சேவையை மீள ஸ்தாபிக்க தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்போது, அந்த நேரத்தில் பெற்றுக்கொண்டிருந்த சம்பளத்தை விட சம்பள உயர்வுகளுடன், பல்வேறு தேவைகளுக்காக வழங்கப்பட்ட கொடுப்பனவுகளை போதுமான அளவு அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இங்கு, மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற 28 பேருக்கு ஜனாதிபதியால் அடையாள ரீதியாக நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

மாகாண ஆளுநர்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத் உள்ளிட்ட பிரதி அமைச்சர்கள், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார மற்றும் அமைச்சுகளின் செயலாளர்கள், பிரதம செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related Articles

Latest Articles