ஈரானின் நீர்மூழ்கி கப்பல் உட்பட 17 போர்க் கப்பல்கள் அழிப்பு: அமெரிக்கா

ஈரான் மீது அமெரிக்கா நடத்தும் ‘எபிக் ஃபியூரி’ ஆபரேஷனில் ஈரான் கடற்படையில் இருந்த ஒரு நீர்மூழ்கி கப்பல் உட்பட 17 போர்க் கப்பல்களை அழித்துவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கடந்த மாதம் 28ஆம் திகதி ஈரான்மீது போர் தொடுத்தன. பதில் தாக்குதலில் இறங்கிய ஈரான், அமெரிக்க ராணுவ முகாம்கள் இருக்கும் வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதால் மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ‘எபிக் ஃபியூரி’ ஆபரேஷன் நடத்தும் அமெரிக்க ராணுவ கமாண்டர் அட்மிரல் பிராட் கூப்பர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஆபரேஷன் எபிக் ஃபியூரியின் முதல் 100 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவில் மிகப் பெரிய தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஈரான் மீது 24 மணி நேரமும் தாக்குதல் நடத்தப்படுகிறது. இதுவரை சுமார் 2,000 இலக்குகளை தாக்கியுள்ளோம். ஈரானின் வான் பாதுகாப்பு மோசமான அளவில் பாதிப்படைந்துள்ளது. ஈரானின் நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை அழித்துள்ளோம்.

ஈரான் கடற்படையை ஒட்டுமொத்தமாக அழித்துவிட்டோம். ஈரான் கடற்படையில் ஒரு நீர்மூழ்கி கப்பல் உட்பட 17 போர்க்கப்பல்கள் இருந்தன. அனைத்தையும் மூழ்கடித்துவிட்டோம். சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு தடையாக இருந்த ஈரானின் அனைத்து இடங்கள் மீதும் பி-2 குண்டு வீச்சு விமானங்கள், எப்-35 போர் விமானங்கள், டொமஹாக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. இவ்வாறு பிராட் கூப்பர் கூறினார்.

ஈரான் கடற்படையில் ஐஆர்ஐஎஸ் மக்ரான் என்ற போர்க் கப்பல் இருந்தது. ஆயில் டேங்கர் கப்பலைப் போர்க் கப்பலாக மாற்றி ஈரான் பயன்படுத்தி வந்தது. ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் முகாமிட்டிருந்த இந்த கப்பலை அமெரிக்க கடற்படை தாக்கி செயல் இழக்கச் செய்தது. ஈரான் கடற்படையில் பகேரி என்ற போர்க் கப்பல் கடந்தாண்டு சேர்க்கப்பட்டது. இதில் ட்ரோன்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் இருந்தன. இதையும் அமெரிக்க கடற்படை தாக்கி மூழ்கடித்துவிட்டது.

 

 

Related Articles

Latest Articles