“பங்களாதேஷானது முஸ்லிம்கள், இந்துக்கள், பௌத்தர்கள் மற்றுமு; கிறிஸ்தவர்கள் என அனைவருக்கும் சொந்தமானது.”
இவ்வாறு பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனும், பங்களாதேஷ் தேசியவாத கட்சியின் (பிஎன்பி) செயல் தலைவருமான தாரிக் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
17 ஆண்டுகளுக்குப் பிறகு தாரிக் ரஹ்மான் நேற்று நாடு திரும்பினார்.
டாக்கா விமான நிலையத்தில் லட்சக்கணக்கான பிஎன்பி தொண்டர்கள் திரண்டு வந்து, தாரிக் ரஹ்மானை வரவேற்றனர்.
அவரது மனைவி ஜூபைதா, மகள் ஜைமா ஆகியோரும் உடன் வந்தனர். குண்டு துளைக்காத பேருந்தில் தாரிக் ரஹ்மானும் குடும்பத்தினரும் டாக்காவில் உள்ள வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்நிலையில், பூர்பாச்சல் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய தாரிக் ரஹ்மான்,
‘‘எனது நாட்டுக்காக என்னிடம் ஒரு திட்டம் உள்ளது. மக்கள் நீண்டகாலமாக விரும்பிய பாதுகாப்பான நாடாக பங்களாதேசை மாற்றுவதே அது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை உருவாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
இந்த நாடு மலைகளில் வசிப்பவர்களுக்கும், சமவெளிப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும், இந்துக்களுக்கும், பவுத்தர்களுக்கும் மற்றம் கிறிஸ்தவர்களுக்கும் சொந்தமானது.” -என்று குறிப்பிட்டார்.
பங்களாதேஷில் மாணவர்களின் போராட்டத்தால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
பங்களாதேஷில் தற்போது முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு உள்ளது.
அங்கு பெப்ரவரி 12-ம் திகதி தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதைய சூழலில் பங்களாதேஷ் தேசியவாத கட்சி , மாணவர் சங்கங்கள் உருவாக்கிய தேசிய மக்கள் கட்சி , அடிப்படைவாத கட்சியான ஜமாத் – இ – இஸ்லாமி ஆகியவை தேர்தல் களத்தில் உள்ளன.
கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பரில் மனைவி, குழந்தையுடன் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் குடியேறிய தாரிக் ரஷ்மான், சுமார் 17 ஆண்டுகள் அரசியல் துறவறம் பூண்டிருந்தார்.
தற்போது நாடு திரும்பியுள்ள அவர், வரும் பொதுத்தேர்தலில் பிஎன்பி கட்சியின் பிரதமர் வேட்பாளராக களமிறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.










