அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தை பாதுகாக்கும் அரசியல் சமரை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி நாளை (28) மாலை 3 மணிக்கு கொழும்பில் விசேட கலந்துரையாடலொன்றை நடத்தவுள்ளது.
இச்சந்திப்பில் பங்கேற்குமாறு சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், தொழிற்சங்க தலைவர்கள், புத்திஜீவிகள் உட்பட ஜனநாயகத்துக்காக குரல் கொடுக்கும் தரப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சஜித் பிரேமதாச தலைமையிலேயே இக்கலந்துரையாடல் இடம்பெறும் எனவும் அவர் கூறினார்.
கொழும்பில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ராஜித சேனாரத்ன மேலும் கூறியவை வருமாறு,
” ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சி காலம் அதன்பின்னர் 1978 இல் ஜே.ஆர். ஆட்சி ஆகியவற்றின்போது கட்சியையும், ஆட்சி அதிகாரத்தையும் முன்னிலைப்படுத்தியே அரசியலமைப்புகள் உருவாக்கப்பட்டன. இந்நிலைமை நல்லாட்சியின்போதே மாற்றப்பட்டது.
மக்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பங்களிப்புடன் 19ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டது.
இதன்மூலம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் சர்வாதிகார அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. உயர் நியமனங்களை வழங்கும் பொறுப்பு அரசியலமைப்பு சபைக்கு வழங்கப்பட்டது. சுயாதீன ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டன. இவை பாதுகாக்கப்படவேண்டும்.
எனவே, 19 இல் ஏதேனும் குறைப்பாடுகள் இருப்பின் கலந்துரையாடலின் பின்னர் அவற்றை மாற்றியமைக்கலாம். ஆனால் நாட்டுக்கு நன்மை பயக்ககூடிய சரத்துகளை நீக்குவதற்கு இடமளிக்ககூடாது. அதனை பாதுகாப்பதற்காக மக்களை அணிதிரட்டி நாம் போராடுவோம். அதன் ஆரம்பகட்டமாக 28 ஆம் திகதி சஜித் பிரேமதாச தலைமையில் சந்திப்பொன்று நடைபெறவுள்ளது” – என்றார்.